கால் நூற்றாண்டாக செயல்படாத கூத்தாநல்லூர் பேருந்து நிலையம்

0
12

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில் கால் நூற்றாண்டுகளாக செயல்படாமல் முடங்கிக் கிடக்கும் பேருந்து நிலையத்தை உடனடியாக திறந்து போக்குவரத்துக்கு வழி வகுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கூத்தாநல்லூர் நகராட்சியில், திருவாரூர் – மன்னார்குடி பிரதான சாலையில் புதிய பேருந்து நிலையம் கடந்த 1998 ஆம் ஆண்டு ஜீன் மாதம் 10 ஆம் தேதி திறக்கப்பட்டது.

இரண்டு ஏக்கரில் அமைக்கப்பட்ட இந்த பேருந்து நிலையத்தில், 14 கடைகளும், கழிவறைகளும் கட்டப்பட்டன. இந்தப் பேருந்து நிலையம் திறக்கப்பட்டு, மூன்று மாதங்கள்தான் செயல்பட்டன. அதன் பிறகு, செயல்படாமல், பேருந்து நிலையம் அதன் முக்கியத்துவத்தை இழந்து பாழாகிக் கொண்டிருக்கிறது.

இது குறித்து, காங்கிரஸ் கட்சி மாவட்டச் செயலாளர் எஸ்.எம். சமீர் கூறியது. கூத்தாநல்லூர் நகராட்சியில் உள்ள பேருந்து நிலையத்தை, திமுக ஆட்சியில், அமைச்சர் கோசி.மணியால் திறக்கப்பட்டது.சின்ன சிங்கப்பூர் என அழைக்கபடும் கூத்தாநல்லூர் நகராட்சி மாநிலத்திலேயே மூன்றாவது சிறந்த நகராட்சியாக கடந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டு விருது பெற்றுள்ளது.

ஆனால், இங்குள்ள பேருந்து நிலையம் பல ஆண்டுகளாக செயல்படாமலேயே வீணாகிக் கொண்டிருப்பது பெரும் வருத்தமளிக்கிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும் பல முறை தெரிவிக்கப்பட்டுள்ளன. இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பேருந்து நிலையம் திறக்கப்படாததால், நகராட்சிக்கு வர வேண்டிய பல லட்சம் ரூபாய் வீணாகிக் கொண்டிருக்கிறது.

பேருந்து நிலையத்தை பராமரித்து, விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு விட வேண்டும்.மேலும், கூத்தாநல்லூரிலிருந்து, தஞ்சாவூர், மன்னார்குடி, கும்பகோணம், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி மற்றும் சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட வேண்டும். இதனால் நகராட்சிக்கு வர வேண்டிய வருமானம் அதிகரிக்கும் என்றார்.

தமிழ் மாநில விவசாய தொழிலாளர்கள் சங்க மாநிலக்குழு உறுப்பினர் எம்.சிவதாஸ் கூறியது. பேருந்து நிலையத்திற்குள் ஜல்லிக்கற்கள், மணலைக் கொட்டுவதற்கும், மின் கம்பங்களை அடுக்கி வைப்பதற்கும், சனிக்கிழமைகளில் வாரச்சந்தைக்கான கடைகள் நடத்துவதற்கும்தான் இந்தப் பேருந்து நிலையம் உபயோகமாக இருந்தது.

தற்போது, வெளியில், மிகப் பெரிய இரும்புக் கேட் போடப்பட்டுள்ளது. ஆனாலும், சமூக விரோதிகள் கேட்டை தாண்டிக் குதித்து, மது அருந்தவும், சீட் விளை யாடவும் பயன்படுத்துகிறார்கள். பேருந்து நிலையம் கட்டுவதற்காக வாங்கப்பட்ட கடனில், வட்டி வட்டியாக ஏறி, கோடிகளை தாண்டியுள்ளதாகவும், அதனால்தான் பேருந்து நிலையத்தை புதுப்பிக்க முடியாமல் நகராட்சி தினறுவதாகவும் தெரிய வருகிறது.

உடனே மாவட்ட ஆட்சியர், சட்டப் பேரவை உறுப்பினர் தலையிட்டு, பேருந்து நிலையப் பிரச்சனையைத் தீர்க்க வேண்டும் என்றார். இதுகுறித்து, நகராட்சியில் இருந்து அதிகாரி கூறியது. கூத்தாநல்லூர் நகராட்சி பேருந்து நிலையம் கட்டப்பட்டதில் உள்ள வட்டியை கட்டினால் தான், அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க முடியும். இது குறித்து முழு விவரங்களையும் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்றார்.

Source Dinamani

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here