பேளூரில் சிறார்களின் மார்கழி ஊர்வலம் நிறைவு: பொங்கல் வைத்து கொண்டாட்டம்

0
22

பேளூரில் மார்கழி வழிபாட்டு ஊர்வலம் நடத்திய சிறுவர்–சிறுமியர்.

வாழப்பாடி அடுத்த பேளூரில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் சிறார்களின் மார்கழி வழிபாட்டு ஊர்வலம் வெள்ளிக்கிழமை நிறைவு பெற்றது. பாரம்பரிய உடை அணிந்து பொங்கல் வைத்து கொண்டாடினர்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே வரலாற்று சிறப்புமிக்க பேளூர் வசிஷ்டநதிக்கரையில் பஞ்சபூத சிவன் சைவ திருத்தலமான தான்தோன்றீஸ்வரர் மற்றும் அஷ்டபுஜ பால மதன வேணுகோபால சுவாமியெனும், வைணவ பெருமாள் கோவிலும் அமைந்துள்ளது.

இறைவழிபாட்டிற்கு உகந்த மாதமான மார்கழியில் அதிகாலையில் எழும் சிறுவர்–சிறுமியர், பெருமாள் கோவிலில் கூடி திருப்பாவை, திருவெம்பாவை புகழ்பாடி, பாரம்பரிய முறைப்படி சங்கு ஊதி வழிபாடு நடத்துவதும், பின்னர் அங்கிருந்து சிவனை போற்றியபடி முக்கிய வீதிகளில் வழியாக, தான்தோன்றீஸ்வரர் கோவிலுக்கு ஊர்வலமாகச் சென்று வழிபாடு நடத்துவதும், பல ஆண்டுகளாக மரபு மாறாமல் தொடர்ந்து வருகிறது.

தமிழகத்தின் வேறெந்த பகுதியிலும் இல்லாத வகையில், சைவ–வைணவ மத நல்லிணக்கத்தை பறைசாற்றும் வகையில், நுாறாண்டுக்கு மோலாக தொடர்ந்து வரும் சிறார்கள் மார்கழி வழிபாட்டு ஊர்வலத்திற்கு, பொதுமக்களும், பக்தர்களும் வழிநெடுக கோலங்களை வரைந்து வைத்து வரவேற்று, சிறுவர்–சிறுமியரை கடவுளின் துாதுவர்களாக கருதி வழிபடுவதும் குறிப்பிடத்தக்கதாகும்.

பேளூரில், நடுங்கும் குளிரிலும், அதிகாலையில் விழித்தெழுந்த சிறுவர்–சிறுமியர், மார்கழி முதல் நாள் வழிபாட்டு ஊர்வலத்தை தொடங்கினர். தொடர்ந்து ஒரு மாதம் ஆன்மிக வழிபாட்டு ஊர்வலம் நடத்திய சிறுவர்-சிறுமியர், மார்கழி இறுதி நாளான வெள்ளிக்கிழமை ஊர்வலத்தை நிறைவு செய்தனர்.

வேட்டி சேலை பாரம்பரிய உடை அணிந்து ஊர்வலத்தில் பங்கேற்க சிறுவர் சிறுமியர், கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர்.
இச்சிறுவர் சிறுமியருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Source Dinamani

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here