காமராஜர் விவாதம் முடிவடைந்துவிட்டது: செல்வப்பெருந்தகை விளக்கம்

Daily Publish Whatsapp Channel


காமராஜர் விவாதம் முடிவடைந்துவிட்டது: செல்வப்பெருந்தகை விளக்கம்

தமிழகத்தில் காமராஜரைச் சுற்றி எழுந்துள்ள விவாதம் இப்போது முடிவுக்கு வந்துவிட்டதாக, மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். விரைவில் தொடங்க உள்ள மக்களவை கூட்டத்தொடரை முன்னிட்டு, மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகள் குறித்து பேசத் திட்டமிட்டு, திமுக பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று சென்னையில், முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதி எம்.பி. டி.ஆர். பாலுவும், அதே தொகுதியில் உள்ள சட்டப்பேரவை உறுப்பினரும், மாநில காங்கிரஸ் தலைவருமான செல்வப்பெருந்தகையும் முதல்வரை நேரில் சந்தித்து, தொகுதி சார்ந்த கோரிக்கைகளை கொண்ட மனுவை வழங்கினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை கூறியதாவது:

“ஸ்ரீபெரும்புதூர் என்பது தொழிற்சாலைகள் அதிகமாக உள்ள ஒரு முக்கியமான தொகுதி. நாட்டில் ஜிஎஸ்டி வரி அதிக அளவில் செலுத்தும் தொகுதியும் இதுவே. இங்கு சாலை வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும் என்பதற்காக, ஊராட்சி மன்றத் தலைவர்களிடமிருந்து தொகுப்பு செய்யப்பட்ட கோரிக்கைகளை முதல்வரிடம் மனுவாக வழங்கியுள்ளோம். அந்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக முதல்வர் உறுதியளித்துள்ளார்,” என்றார்.

மேலும், “காமராஜரைச் சுற்றி ஏற்பட்டிருந்த கருத்துவாதம் இனி தொடரவில்லை. அதற்கென நேற்று முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது. இத்துடன் அது முடிந்தது. ஆனால், அதைப் பயன்படுத்தி திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலக வேண்டும் என்று அண்ணாமலை பேசியிருப்பது, ‘ஆடு நனைகிறதைய பார்த்து ஓநாய் அழும் கதையைப் போல் உள்ளது.

அண்ணாமலைக்கு எங்கள் கூட்டணியைப் பற்றிய கவலை எதற்காக? ஒருகாலத்தில் டெல்லியில் காமராஜரை வீட்டுடன் கூடி அழிக்க முயற்சி செய்தவர்கள், இன்று அவருக்குப் பிறந்த நாள் விழா நடத்துவது போல நடிப்பது ஏன்? பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் வேடம் தமிழக மக்களுக்கு ஒட்டுவதில்லை. அந்த வேடங்களை மக்கள் ஒருபோதும் ஏற்கமாட்டார்கள்” எனக் கடுமையாக விமர்சித்தார்.

Facebook Comments Box