WhatsApp Channel
ஞாயிற்றுக்கிழமை விடுமுறையையொட்டி அக்னி தீர்த்த கடற்கரையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
தென் கைலாயம் என்று அழைக்கப்படும் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் வந்து செல்கின்றனர். இங்குள்ள அக்னி தீர்த்தக்கடலில் புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் பலன் கிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால், ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். பக்தர்கள் அதிகாலையில் கடலில் புனித நீராடி தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் மற்றும் திதி கொடுக்கின்றனர். மேலும், கோயிலின் வடக்கு கோபுர வாயிலில் இருந்து கிழக்கு ரத வீதி வாசல் வரை நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். விடுமுறையை முன்னிட்டு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது.
ராமேஸ்வரத்தில் பக்தர்கள் குவிந்ததால், அப்பகுதி முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கடலில் நீராடும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி போலீசார் கடல் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Discussion about this post