சதுரகிரியில் நேற்று மலையேற தடை விதிக்கப்பட்டதால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. அங்கு கடந்த 1ம் தேதி முதல் அமாவாசை தினமான நேற்று முன்தினம் வரை 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். நேற்று முன்தினம் பக்தர்கள் கூட்ட நெரிசலால் தாணிப்பாறை அடிவாரத்தில் உள்ள வனவாசல் பகல் 12 மணிக்கு மூடப்பட்டு பக்தர்களுக்கு மலை ஏற அனுமதி மறுக்கப்பட்டது.
ஆனால் தேனி மாவட்டம் வருசநாடு உப்பல்துறை பாதை வழியாகவும், மதுரை மாவட்டம் சாப்டூர் பனியன் தோப்புப் பாதை வழியாகவும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாலை 6 மணி வரை தொடர்ந்து மலையேறி வந்ததால் மலைப்பாதையிலும், சுந்தரமகாலிங்கம் கோயிலிலும் பக்தர்கள் கூட்டம் குறையவில்லை.
கூட்ட நெரிசல் காரணமாக மலைப்பாதையில் உள்ள இரட்டை லிங்கம் பகுதியில் இருந்து இறங்கி வந்த பக்தர்கள் மாலை 6 மணி முதல் கீழே இறங்குவது நிறுத்தப்பட்டது. மலைப்பாதையில் பக்தர்கள் வசதிக்காக மருத்துவ முகாம் மற்றும் போலீசார் பணியில் ஈடுபடவில்லை என்றும், ஒரே இடத்தில் உணவு, குடிநீர் இன்றி பல மணி நேரம் காத்திருப்பதாகவும் பக்தர்கள் குற்றம் சாட்டினர்.
இதனால், கடைசி நாளில், பக்தர்கள் மலை ஏற தடை விதிக்கப்பட்டது. கோவில் மற்றும் மலைப்பாதையில் தங்கியிருந்த பக்தர்கள் மட்டும் மலையடிவாரத்தில் இறங்க அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், கூட்டத்தில் சிக்கிய குருகீதா, குமரகீதா, லட்சுமி ஆகிய மூவருக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு திடீரென மயங்கி விழுந்தனர். உடனடியாக அவர்களை உடன் வந்தவர்கள் மீட்டு வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
Discussion about this post