வைணவ கோவில்களுக்கு இலவச ஆன்மிக யாத்திரை செல்ல மூத்த குடிமக்கள் விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
புரட்டாசி மாதத்தில் தமிழகத்தில் உள்ள முக்கிய வைணவ கோவில்களுக்கு இலவச ஆன்மிக பயணத்தில் பங்கேற்க மூத்த குடிமக்கள் விண்ணப்பிக்கலாம் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக மக்கள் தெய்வ வழிபாட்டில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள்.ஒரே நாளில் பல்வேறு கோவில்களுக்கு செல்வதையே விரும்புகின்றனர்.இதை கருத்தில் கொண்டு 2024-2025 நிதியாண்டுக்கான இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கையின் போது வெளியிட்ட அறிவிப்பில் அம்மன் கோவில்கள் ஆடி மாதத்தில் பிரசித்தி பெற்ற மற்றும் புரட்டாசி மாதத்தில் பிரசித்தி பெற்ற வைணவ கோவில்களில் தரிசனம் பெற முடியாத 60 வயது முதல் 70 வயது வரை உள்ள 1,000 பக்தர்கள் அழைத்துச் செல்லப்படுவார்கள் என்றும், இதற்கான கட்டணம் ரூ. 50 லட்சம் அரசு நிதியாக வழங்கப்பட்டது.
இந்த அறிவிப்பை நிறைவேற்றும் வகையில், சென்னை, காஞ்சிபுரம், மயிலாடுதுறை, திருச்சி, மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய இடங்களில் உள்ள முக்கிய வைணவ கோவில்களுக்கு புரட்டாசி மாதத்தில் 1,000 மூத்த குடிமக்கள் இலவசமாக (உணவு உட்பட) ஆன்மிக பயணம் மேற்கொள்ளப்படும்.
21.09.2024, 28.09.2024, 05.10.2024, 12.10.2024 ஆகிய நான்கு கட்டங்களாக வைணவ ஆலயங்களுக்கு புரட்டாசி மாத யாத்திரை தொடங்கப்படும். இந்த ஆன்மீக பயணத்தில் பங்கேற்க விரும்பும் மூத்த குடிமக்கள் இந்துக்களாகவும், 60 முதல் 70 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும்.
இதற்கான விண்ணப்பங்களை இந்து சமய அறநிலையத் துறையின் www.hrce.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது சம்பந்தப்பட்ட மண்டல இணை ஆணையர் அலுவலகத்தில் நேரில் சென்று பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய சான்றிதழ்களுடன் சம்பந்தப்பட்ட மண்டல இணை ஆணையர் அலுவலகத்தில் 19.09.2024க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
எனவே, புரட்டாசி மாதத்தில் வைணவக் கோயில்களுக்கு ஆன்மிக பயணம் மேற்கொள்ள விரும்பும் மூத்த குடிமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு தெய்வீக தரிசனம் செய்யலாம்” என்றார்.
இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.