ஹைதராபாத்தில் நடைபெற்ற உலக அழகிப் போட்டியில் தாய்லாந்தைச் சேர்ந்த ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரீ 72-வது மிஸ் வேர்ல்டு பட்டத்தை கைப்பற்றினார். அவருக்கு ரூ.8.5 கோடியை பரிசாக அளித்தனர்.
2025-ம் ஆண்டுக்கான மிஸ் வேர்ல்டு இறுதிப் போட்டி ஹைதராபாத்திலுள்ள ஹைடெக்ஸ் கண்காட்சி மையத்தில் நடத்தப்பட்டது. இந்த போட்டியில் 120 நாடுகளுக்கு சேர்ந்த அழகிகள் கலந்துகொண்டனர்.
மே 10-ஆம் தேதி ஆரம்பமான இந்த விழாவின் இறுதி நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரீ, மார்டினிக், எத்தியோப்பியா மற்றும் போலந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்களை முந்தி வெற்றிபெற்றார். அவருக்கு, கடந்த ஆண்டின் உலக அழகி பட்டத்தை வென்ற செக் குடியரசைச் சேர்ந்த கிறிஸ்டினா பிஸ்கோவா கிரீடம் சூட்டினார்.
போலந்து நாட்டின் மஜா கிளாஜ்தா இரண்டாவது இடத்தையும், மார்டினிக்கின் ஆரேலி ஜோகிம் மூன்றாவது இடத்தையும் பெற்றனர். எத்தியோப்பியாவின் ஹாசெட் டெரெஜே அட்மாசு முதல் ரன்னராக அறிவிக்கப்பட்டார்.
இந்த விழாவில், தனது மனிதநேய சேவைகளை மதித்து நடிகர் சோனு சூடுக்கு “மிஸ் வேர்ல்ட் மனிதாபிமான விருது” வழங்கப்பட்டது.
இந்த உலக அழகிப் போட்டி இந்தியாவில் இதற்கு முன்பு 1996 மற்றும் 2024-ல் நடைபெற்றது. இந்த வருடம் மூன்றாவது முறையாக இந்தியாவில் நடைபெற்ற இந்த விழா, ஹைதராபாத்தில் நடைபெறுவது இதுவே முதன்முறையாகும்.
ஓபல் சுச்சாட்டா பற்றி சில தகவல்கள்:
தாய்லாந்தின் புக்கட் தீவிலிருந்து வருகிறார். கடந்த ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் தாய்லாந்து பட்டம் வென்றவர். மிஸ் யுனிவர்ஸ் 2024 போட்டியில் மூன்றாவது இடம் பெற்றவர். தற்போது தம்மசாட் பல்கலைக்கழகத்தில் அரசியல் மற்றும் சர்வதேச உறவுகள் துறையில் இளங்கலைப் படிப்பு மேற்கொண்டு வருகிறார்.