3 இந்தியர்கள் ஈரானில் கடத்தப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, அந்நாட்டு அரசு எச்சரிக்கை
ஈரானில் மூவர் இந்தியர்கள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக, இந்தியர்கள் சட்டவிரோத முகவர்கள் மூலம் வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டாம் என ஈரான் அரசு அறிவுறுத்தியுள்ளது.
பஞ்சாபைச் சேர்ந்த ஹுசன்ப்ரீத் சிங், ஜஸ்பால் சிங் மற்றும் அம்ரித்பால் சிங் ஆகியோர், உள்ளூர் முகவர் உதவியுடன் ஆஸ்திரேலியா செல்ல திட்டமிட்டிருந்தனர். துபாய் மற்றும் ஈரான் வழியாக அவர்களை ஆஸ்திரேலியா கொண்டு செல்லமுடியும் என அந்த முகவர் நம்பிக்கை அளித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, ஜூன் 1-ம் தேதி ஈரான் சென்ற அந்த மூவரையும் ஒரு கும்பல் கடத்தியது. பின்னர், அவர்கள் குடும்பத்தினரிடம் ரூ.1 கோடி பணம் வேண்டுமெனத் தெரிவிக்கப்பட்டது.
கடத்தப்பட்ட நபர்களின் கைகள் கட்டப்பட்டு, உடலில் காயங்களுடன் இருப்பது போன்ற புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் அவர்களது குடும்பத்தினருக்கு அனுப்பப்பட்டுள்ளன. அவர்களிடம் சில நாட்கள் மட்டுமே தொடர்பு இருந்தது. ஜூன் 11-ம் தேதிக்குப் பிறகு, அவர்கள் தொடர்பில் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து இந்திய தூதரகம் ஈரான் அரசிடம் முறையிட்டுள்ளது. விசாரணையில் ஈடுபட்டுள்ள ஈரான் அரசு, சட்டவிரோதமாக செயல்படும் முகவர்கள் மூலம் வெளிநாடுகளுக்கு செல்ல முயல்வதை தவிர்க்குமாறு இந்தியர்களை எச்சரித்துள்ளது.