இந்தியன் வங்கியின் புதிய சேமிப்புக் கணக்குத் தொடக்கம் – வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கான சேவை
முக்கியமான ஒரு அரசுத்துறை வங்கியான இந்தியன் வங்கி, வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட புதிய சேமிப்புக் கணக்குகளை அறிமுகம் செய்துள்ளது. ‘என்ஆர்இ’ (NRE) சேமிப்புக் கணக்கு என அழைக்கப்படும் இந்தத் திட்டம், வெளிநாட்டு இந்தியர்கள் தங்கள் வருமானங்களை எளிமையாக நிர்வகித்து, பரிமாற்றம் செய்ய வசதியாக இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சேமிப்புக் கணக்குகளுடன் இணைந்த ப்ரீமியம் டெபிட் கார்டுகளும் வங்கியால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த புதிய சேவைகளை, வங்கியின் உயர் நிர்வாகிகள் முன்னிலையில், அதன் நிர்வாக இயக்குநரும் தலைமை செயல் அதிகாரியுமான திரு. பினோத் குமார் அண்மையில் துவக்கி வைத்தார். இந்த சேவைகள், வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் எதிர்கொள்ளும் நவீன நிதி தேவைகளை புரிந்து கொண்டு, அவர்களின் வாழ்வ்முறைக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டவை.
இந்த திட்டங்கள், IND D’Elite, IND Premium, IND Plus எனப்படும் உயர்தர டெபிட் கார்டுகளை உள்ளடக்கியது. இந்த கார்டுகள் மூலம், விமான நிலையங்களிலுள்ள லவுஞ்ச் வசதி, தனிப்பட்ட விபத்து காப்பீடு மற்றும் பிரத்யேக சலுகைகள் உள்ளிட்ட பல்வேறு நன்மைகளை வாடிக்கையாளர்கள் அனுபவிக்க முடியும்.
இதுகுறித்து, நிர்வாக இயக்குநர் பினோத் குமார் கூறியதாவது:
“வசதியும், பாதுகாப்பும், மதிப்பும் அடங்கிய நவீன டிஜிட்டல் வங்கி சேவைகளை வெளிநாட்டு இந்தியர்களுக்கு வழங்கும் முயற்சியில் இந்தியன் வங்கி தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. உலகளாவிய இந்திய சமுதாயத்துடனான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதே எங்கள் குறிக்கோள்” எனத் தெரிவித்தார்.
இந்த தகவல், இந்தியன் வங்கியின் அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில் வெளியிடப்பட்டுள்ளது.