துபாயிலிருந்து தங்க நகைகளை கடத்திய குற்றச்சாட்டில் கன்னட நடிகை ரன்யா ராவ் பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். ரன்யா ராவிடமிருந்து சுமார் ரூ.12 கோடி மதிப்புள்ள 14.8 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டதன் பின்னணியை இந்த செய்தி தொகுப்பு விவரிக்கிறது.
கர்நாடகாவின் சிக்மகளூரைச் சேர்ந்த 32 வயதான ரன்யா ராவ், ஒரு பிரபல கன்னட திரைப்பட நடிகை. கன்னட நடிகர் கிச்சா சுதீப் இயக்கிய “மாணிக்யா” படத்தில் சுதீப்புக்கு ஜோடியாக அறிமுகமானார். தமிழில், நடிகை ரன்யா ராவ், நடிகர் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக வாகா படத்தில் கதாநாயகியாக நடித்தார்.
கர்நாடகாவில் டிஜிபி அந்தஸ்தில் உள்ள ஐபிஎஸ் அதிகாரி ராமச்சந்திர ராவின் வளர்ப்பு மகள் நடிகை ரன்யா ராவ். ஐபிஎஸ் அதிகாரியான ராமச்சந்திர ராவ், கர்நாடக காவல்துறையின் வீட்டுவசதி கழகத்தில் பணிபுரிகிறார்.
அடிக்கடி சர்வதேச அளவில் பயணம் செய்யும் நடிகை ரன்யா ராவ், வருவாய் புலனாய்வு இயக்குநரகத்தின் ரகசிய கண்காணிப்பில் உள்ளார். கடந்த 15 நாட்களில் மட்டும் நான்கு முறை துபாய்க்கு பயணம் செய்துள்ளார். நான்காவது முறையாக துபாய் சென்ற நடிகை ரன்யா ராவ், கடந்த திங்கட்கிழமை இரவு துபாயிலிருந்து எமிரேட்ஸ் விமானத்தில் பெங்களூரு வந்தடைந்தார்.
அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக நகைகளை அணிந்திருந்ததற்காக வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகளால் ரன்யா ராவ் சோதனை செய்யப்பட்டார். அவர் அதிக அளவு தங்க நகைகளை அணிந்திருந்ததையும், அவரது ஆடைகளில் தங்கக் கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததையும் உளவுத்துறை அதிகாரிகள் கண்டறிந்தனர்.
துபாய் செல்லும் ஒவ்வொரு முறையும் தங்கத்தை கடத்தி வந்த ரன்யா ராவ், கையும் களவுமாக பிடிபட்டார். அவரிடமிருந்து 14.8 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பெங்களூருவில் உள்ள டிஆர்ஐ தலைமையகத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.
முதற்கட்ட விசாரணையின் போது, டிஎஸ்பி ஒருவரின் மகள் என்று கூறிக்கொண்ட ரன்யா ராவ், பெங்களூரு பெருநகர காவல்துறையினர் தன்னை வீட்டிற்கு அழைத்துச் செல்வார்கள் என்று கூறினார். ஆனால் யாரும் வரவில்லை. அதன் பிறகு, அவர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையில், தனது மகளிடமிருந்து பிரிந்து இருப்பதாகக் கூறிய கர்நாடக டிஜிபி ராமச்சந்திர ராவ், அவர் என்ன செய்கிறார் என்பது குறித்து தனக்கு எந்த தகவலும் இல்லை என்று கூறியுள்ளார்.
ராமச்சந்திர ராவ் கூறுகையில், ரன்யா ராவ் நான்கு மாதங்களுக்கு முன்பு கட்டிடக் கலைஞர் ஜதின் ஹுக்கேரியை மணந்தார், அதன் பிறகு அவரைச் சந்திக்க வரவில்லை. ரன்யா ராவ் மற்றும் அவரது கணவரின் தொழில் பற்றி தனக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எதுவும் தெரியாது என்றும் அவர் விளக்கினார்.
தனது வளர்ப்பு மகள் தன்னை அவமானப்படுத்தியதாகக் கூறிய ராமச்சந்திர ராவ், ரன்யா சட்டத்தை மீறியிருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
துபாயிலிருந்து இந்தியாவிற்கு தங்கம் கடத்தும் ஒரு பெரிய கடத்தல் கும்பலின் ஒரு பகுதியாக ரன்யா ராவ் இருக்கலாம் என்ற சந்தேகமும் உள்ளது. ரன்யா ராவ் யாருடன் தொடர்பில் இருந்தார், அவரை தங்கக் கடத்தலில் யார் ஈடுபடுத்தினார்கள் என்பதைக் கண்டறிய விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த சூழலில், ரன்யா ராவின் தங்கக் கடத்தலுக்குப் பின்னால் கர்நாடக காவல் துறையின் மூத்த அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.