WhatsApp Channel
ஆந்திராவில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜக கூட்டணியில் இருந்து விலகிய ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யாண், தெலுங்கு தேசத்துடன் இணைந்து தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்திருப்பது ஆளும் ஜெகன் மோகன் ரெட்டியின் ஓஎஸ்ஆர் காங்கிரசுக்கு அதிர்ச்சி அளிக்கும் முடிவு.
ஆந்திராவில் 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. எனவே இம்முறையும் அவ்வாறே தேர்தல் நடைபெறவுள்ளது. கடந்த (2019) ஆந்திர சட்டசபை தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஓஎஸ்ஆர் காங்கிரஸ் 151 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி 23 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. பவன் கல்யாணின் ஜனசேனா ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. தேசிய கட்சிகளான காங்கிரஸும், பாஜகவும் இங்கு எங்கும் வெற்றி பெறவில்லை.
இந்நிலையில், அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் ஆந்திர மாநில சட்டசபை தேர்தல் நடைபெறுவது உறுதியாகியுள்ளது. அடுத்த ஆண்டு பிப்ரவரி இறுதியில் அல்லது மார்ச் மாத தொடக்கத்தில் சட்டசபை தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஆந்திராவில் தேர்தல் தொடர்பான வியூகங்கள் ஏற்கனவே வேரூன்றியுள்ளன.
சமீபத்தில் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திபாபு நாயுடு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு ஆதரவாக ஆந்திராவில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதனிடையே, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க அரசுக்கு மிகவும் நெருக்கமாக இருந்து வந்த பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி, தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகி தெலுங்கு தேசத்துக்கு ஆதரவாக செயல்படுவதாக அறிவித்துள்ளது.
சந்திரபாபு நாயுடு கைது ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவருக்கு பவன் கல்யாண் ஆதரவு அளித்திருப்பது புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவை பொறுத்தவரை கடந்த முறை தெலுங்கு தேசம் படுதோல்வி அடைந்ததற்கு பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியே முக்கிய காரணம். இந்த முறை தெலுங்கு தேசத்துடன் கூட்டணி வைப்பது சந்திரபாபு நாயுடுவுக்கு கூடுதல் பலமாக இருக்கும் என்கின்றனர் ஆந்திர பத்திரிகையாளர்கள்.
ஆந்திராவில் தற்போது ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. மீண்டும் ஆட்சிக்கு வர ஜெகன் பல்வேறு வியூகங்களை எடுத்து வருகிறார். சந்திரபாபு நாயுடுவின் கைதும் அதில் ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. சந்திரபாபு நாயுடு சட்ட சிக்கலில் சிக்குவதற்கு ஜெகன் மோகன் ரெட்டியின் வியூகமே காரணம் என்று கூறப்படுகிறது. அதே சமயம் சட்டசபை தேர்தலில் அனுதாப அலை வீசுவதாகவும் அது சந்திரபாபு நாயுடுவுக்கு சாதகமாக மாறலாம் என்றும் கூறப்படுகிறது.
ஜெகன் மோகன் ரெட்டியை பொறுத்த வரையில் பாஜக கூட்டணியில் இல்லாவிட்டாலும் மிகவும் அனுசரணையாக இருந்து வருகிறார். பிஜேபியின் பல மசோதாக்களை ஜெகன் மோகன் ரெட்டி ஆதரித்ததால், தேவைப்பட்டால் அவர் பாஜகவை ஆதரிப்பார். அவரது ஆதரவால் பல மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இதனால் பவன் கல்யாண் தற்போது தெலுங்கு தேசத்துடன் இணைந்திருப்பதால், நாடாளுமன்ற தேர்தலில் ஜெகன் பாஜகவுக்கு ஆதரவளிப்பாரா அல்லது வழக்கம் போல் வெளியில் இருந்து ஆதரிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆனால், நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை என்று நேரடியாகவே கூறுகிறார் ஜெகன் மோகன் ரெட்டி. பாஜகவுடனான கூட்டணியை அதிமுக முறித்துக்கொண்ட நிலையில், தற்போது பவன் கல்யாணின் ஜனசேனாவும் உடைவது தென்னிந்தியாவில் அக்கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்கிறார்கள்.
Discussion about this post