WhatsApp Channel
கேரளாவில் திருவிதாங்கூர் தேவசம் போர்டின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் இந்துத்துவா இயக்கம், பா.ஜ.க.வின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். பயிற்சி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் பாஜக பலம் பெற முடியாமல் போகலாம். ஆனால் கேரளாவில் ஆர்எஸ்எஸ் இயக்கம் வலுவான கட்டமைப்புகளைக் கொண்டுள்ளது. கேரளாவில் உள்ள கோவில்களில் ஆர்.எஸ்.எஸ் இயக்கம் இயற்கையாகவே பயிற்சிகளை மேற்கொள்வது நீண்ட காலமாக நடைமுறையில் உள்ளது. இவற்றில் ஆயுதப் பயிற்சியும் அளிக்கப்படுவதாக புகார் எழுந்தது.
இந்நிலையில் கோவில்களில் திருவிதாங்கூர் தேவசம் போர்டு ஏற்கனவே ஆர்.எஸ்.எஸ். இயக்கப் பயிற்சிகள் நடத்த தடை விதித்திருந்தது. ஆனால் தடையையும் பொருட்படுத்தாமல் ஆர்எஸ்எஸ் பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இது தொடர்பாக கேரள உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. பான் மசாலா, ஹான்ஸ் போன்றவற்றை பயன்படுத்தும் ஆர்.எஸ்.எஸ். ஆர்வலர்கள் கோவில் சுவர்களிலும் எச்சில் துப்புவதன் மூலம் அவற்றை இழிவுபடுத்துகின்றனர்; கோவில்களின் அமைதியான சூழலை கெடுக்கின்றனர் என்றும் வழக்கில் சுட்டிக்காட்டப்பட்டது. இந்த வழக்கில் ஆர்எஸ்எஸ் அமைப்பு கோயில் வளாகத்தில் ஆயுதப் பயிற்சி நடத்த நீதிமன்றம் தடை விதித்தது.
இதையடுத்து தற்போது திருவிதாங்கூர் தேவசம் போர்டு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. திருவிதாங்கூர் தேவசம் போர்டு கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தினர் பயிற்சி மேற்கொள்ளக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த தடையை ஆர்.எஸ்.எஸ். விமர்சிக்கப்பட்டது. கேரளாவில் ஆளும் இடதுசாரி அரசு இந்து கோவில்களை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. திருவிதாங்கூர் தேவசம் போர்டு கேரளாவில் ஆளும் இடதுசாரி அரசின் கீழ் இருப்பதாக ஆர்.எஸ்.எஸ். இயக்கம் விமர்சித்துள்ளது.
ஆர்எஸ்எஸ் இயக்கம் 1925ஆம் ஆண்டு இதே விஜயதசமி நாளில்தான் தொடங்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமி இந்த நாளில் ஆர்எஸ்எஸ் இயக்கம் ஊர்வலங்கள் மற்றும் அணிவகுப்புகளை நடத்தும். தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலத்துக்கு தமிழக அரசு பெரும் தடையாக இருந்து வருகிறது. தற்போது கேரளாவிலும் கோவில் வளாகங்களில் ஆர்எஸ்எஸ் நடவடிக்கைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற அடுத்தடுத்த தடைகள் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
Discussion about this post