பர்வாட் சமூகத்தினர் இயற்கை விவசாயத்தை தழுவ வேண்டும் – பிரதமர் மோடி வலியுறுத்தல்
குஜராத்தின் பர்வாட் சமூகத்தினர் இயற்கை விவசாயத்தை மேற்கொண்டு நாட்டின் வளர்ச்சியில் பங்களிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
அகமதாபாத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக உரையாற்றிய அவர், கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள பர்வாட் சமூகத்தினர், இந்தியாவை வலுவான மற்றும் முன்னேறிய நாடாக உருவாக்க முக்கிய பங்கு வகிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
அடுத்து வரும் 25 ஆண்டுகளில், நாம் வளர்ந்த இந்தியாவை உருவாக்க வேண்டியுள்ளோம். இதில் பர்வாட் சமூகத்தினர் முக்கிய பங்காற்ற வேண்டும் என்று குறிப்பிட்டார்.
“நமது தாய் பூமி, நீண்ட காலமாக விஷ இரசாயனங்களால் பாதிக்கப்பட்டுள்ளது. அதை மீண்டும் ஆரோக்கியமான நிலையாக மாற்றுவது நமது பொறுப்பு,” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மாட்டு சாணம் மண்ணை மீட்டெடுக்க உதவுமெனவும், இயற்கை விவசாயத்தை கடைப்பிடித்து, நிலத்துக்கு மீண்டும் உயிர்ப்புக்கொடுக்க பர்வாட் சமூகத்தினர் முன்வரவேண்டும் என அவர் வலியுறுத்தினார்.