வக்ஃப் திருத்தச் சட்டத்திற்கு எதிராக மீண்டும் வன்முறை வெடித்ததால் மேற்கு வங்கத்தில் நிலைமை பதட்டமாக மாறியுள்ளது.
வக்ஃப் திருத்தச் சட்டத்திற்கு எதிராக மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத்தில் சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற போராட்டம் வன்முறையில் முடிந்தது. வன்முறையில் போலீஸ் வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன, மூன்று பேர் கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில், தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் பங்கர் பகுதியில் மதச்சார்பற்ற முன்னணி நேற்று ஒரு போராட்டத்தைத் தொடங்கியது. அதில் பங்கேற்க மத்திய கொல்கத்தாவில் உள்ள ராம்லீலா மைதானத்தை நோக்கி மதச்சார்பற்ற முன்னணி ஆதரவாளர்கள் சென்றனர்.
அப்போது, காவல்துறையினருக்கும் மதச்சார்பற்ற முன்னணியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், அங்கு நிறுத்தப்பட்டிருந்த போலீஸ் வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன, போலீசாரும் தாக்கப்பட்டனர்.
நிலைமை மோசமடைந்ததால், கூட்டத்தைக் கலைக்க போலீசார் லேசான தடியடி நடத்தினர். இருப்பினும், அங்கு பதட்டமான சூழ்நிலை தொடர்வதால், பாதுகாப்புக்காக போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.