துருக்கி ஆதரவு கொண்ட சிலிபி நிறுவனத்தின் பாதுகாப்பு அனுமதி இந்தியாவில் ரத்து – காரணம் என்ன?

0

துருக்கி ஆதரவு கொண்ட சிலிபி நிறுவனத்தின் பாதுகாப்பு அனுமதி இந்தியாவில் ரத்து – காரணம் என்ன?

துருக்கியைத் தலைமையிடமாகக் கொண்ட “Celebi Airport Services India” நிறுவனத்தின் பாதுகாப்பு அனுமதி இந்தியா முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தத் தவிர்க்க முடியாத நடவடிக்கையை மத்திய அரசு எடுக்க முக்கிய காரணமாக, துருக்கி பாகிஸ்தானுக்கு காட்டிய வெளிப்படையான ஆதரவே முக்கிய பங்கு வகித்ததாக கூறப்படுகிறது.

அண்மையில் இடம்பெற்ற ஆபரேஷன் சிந்தூரின் போது, இந்தியா மேற்கொண்ட பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் பாகிஸ்தான் தன்னுடைய விமானப்படை மூலம் இந்திய விமானத் தளங்களை குறிவைத்து 500-க்கும் மேற்பட்ட ட்ரோன்களை ஏவியது. இந்த ட்ரோன்கள் அனைத்தும் இந்திய பாதுகாப்புப் படைகளால் நடுவானிலேயே சுட்டு வீழ்த்தப்பட்டன. ஆய்வு செய்தபோது, அந்த ட்ரோன்கள் அனைத்தும் துருக்கியின் பைகர் டிஃபென்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டவை என்பது உறுதி செய்யப்பட்டது.

துருக்கியின் பைகர் டிஃபென்ஸ் நிறுவனத்தை இயக்குபவர் Selçuk Bayraktar, அவர் துருக்கி அதிபர் எர்டோகனின் மருமகனும், Celebi நிறுவனத்தின் உரிமையாளரான Sumeyye Bayraktarவின் கணவரும் ஆவார். இதனால், துருக்கி மற்றும் பாகிஸ்தான் இடையிலான ஆழமான ராணுவ ஒத்துழைப்பு வெளிக்கொணரப்பட்டுள்ளது. இந்தியாவின் பாதுகாப்பு நலனை நோக்கி நடந்த எதிர்மறை நடவடிக்கையைக் கண்டித்து, துருக்கியை இந்தியர்கள் சமூக ஊடகங்களில் “#BoycottTurkey” ஹேஷ்டேக் மூலம் கண்டிக்கத் தொடங்கினர்.

இந்நிலையில், இந்தியாவின் விமானப் பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணையம் உடனடியாகச் செலிபி நிறுவனத்தின் பாதுகாப்பு அனுமதியை ரத்து செய்தது. கடந்த 15 ஆண்டுகளாக, இந்த நிறுவனம் டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், கோவா, அகமதாபாத் உள்ளிட்ட 9 முக்கிய விமான நிலையங்களில் தரை சேவைகளை வழங்கி வந்தது. பயணிகள் சேவை, விமானப் பராமரிப்பு, சரக்கு ஏற்ற இறக்குமதி ஆகியவை இதில் அடங்கும்.

இந்த நடவடிக்கையால் பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படாது என மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு உறுதியளித்துள்ளார். மேலும், “நாட்டின் பாதுகாப்பு என்ற விடயம் எந்த வணிக ஒப்பந்தத்தையும் விட முக்கியமானது” என்றும் அவர் சுட்டிக்காட்டினார். தற்போது செலிபி நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் அந்தந்த விமான நிலையங்களில் தொடர வைத்துக் கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை, எதிர்காலத்தில் இந்திய விமானப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான ஒரு முக்கிய கட்டமாக பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here