கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாக உள்ளதால் இந்தியாவுக்கு கூடுதல் தடுப்பூசிகள், மருத்துவ உதவிகளை செய்ய வேண்டும்’ என, அமெரிக்க அதிபர் ஜோ பைடனை, பல மாகாணங்களை சேர்ந்த கவர்னர்கள், எம்.பி.,க்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலையின் தாக்கம், இந்தியாவில் தீவிரமாக உள்ளது. ஆக்சிஜன், தடுப்பூசி, மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதற்கு, பல நாடுகள் உதவி வருகின்றன. தடுப்பூசிக்கான தேவை அதிகமாக உள்ளது. இந்நிலையில் தன்னிடம் இருப்பில் உள்ள எட்டு கோடி ‘டோஸ்’ தடுப்பூசிகளை மற்ற நாடுகளுக்கு வழங்குவதாக, அமெரிக்கா அறிவித்தது. முதல் கட்டமாக, 2.5 கோடி தடுப்பூசிகளை, தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் ஆப்ரிக்காவுக்கு, இம்மாத இறுதிக்குள் அனுப்புவதாக, அதிபர் ஜோ பைடன் சமீபத்தில் அறிவித்தார். ‘அதில், 75 சதவீதம், அதாவது, 1.9 கோடி டோஸ் தடுப்பூசி இந்தியாவுக்கு வழங்கப்படும்’ என, அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், ‘மிகச் சிறந்த நட்பு நாடான இந்தியாவுக்கு அதிக உதவிகளை செய்ய வேண்டும்’ என, ஜனநாயக மற்றும் குடியரசு கட்சியை சேர்ந்த கவர்னர்கள், எம்.பி.,க்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர்.”நம் நட்பு நாடான இந்தியாவில் நிலைமை மோசமாக உள்ளபோது, உதவி செய்வது நம் கடமை. கொரோனாவுக்கு எதிராக போராடும் இந்தியாவுக்கு அதிக உதவிகளை செய்ய வேண்டும்,” என, குடியரசு கட்சியை சேர்ந்த டெக்சாஸ் கவர்னர் கிரெக் அபோட் கூறியுள்ளார்.
குடியரசு கட்சியை சேர்ந்த எம்.பி.,க்கள் டெட் குரூஸ், ரோஜர் விகர், மைக்கேல் மெக்கால், ஆடம் ஸ்மித் என, பல எம்.பி.,க்களும் இந்தியாவுக்கு ஆதரவாக குரல் எழுப்பி உள்ளனர். இந்தியாவை பூர்வீகமாக உடைய, ஜனநாயக கட்சி எம்.பி.,யான ரோ கன்னா உள்ளிட்டோரும், அதிக உதவிகளை செய்ய வலியுறுத்தியுள்ளனர்.
Discussion about this post