இந்தியில் பல்வேறு டிவி தொடர்களில் நடித்து வருபவர் பியரல் வி.பூரி. இவர் 2019ம் ஆண்டு படப்பிடிப்பு ஒன்றில் நடிகை ஒருவரின் 5 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2019ம் ஆண்டு மும்பை அருகில் உள்ள வசாயில் டிவி நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு நடைபெற்றபோது அதில் பியரல் பூரி கலந்து கொண்டார். இப்படப்பிடிப்புக்கு நடிகை ஒருவர் அவரது 5 வயது மகளையும் அழைத்து வந்திருந்தார். அவர் தனது மகளை படப்பிடிப்பில் விட்டிருந்தார்.
பியரல் பூரி
அச்சிறுமியை பியரல் பூரி விளையாட அழைத்து செல்வதாகக்கூறி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சிறுமி இது குறித்து தனது தாயாரிடம் தெரிவித்துள்ளார். ஆனால் சிறுமியின் தாயார் இது குறித்து கண்டுகொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.
மறுநாள் சிறுமிக்கு உடல்வலி எடுப்பதாக தந்தையிடம் தெரிவித்தார். உடனே அவளை அவளது தந்தை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். மருத்துவமனையில் தான் சிறுமி பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. சிறுமியும் முதல் நாள் நடந்த சம்பவம் குறித்து தனது தந்தையிடம் கூற, சிறுமியின் தந்தை இது தொடர்பாக போலீஸில் புகார் செய்தார்.
மும்பை வர்சோவா போலீஸார் இது குறித்து வழக்குப்பதிவு செய்தபின், சம்பவம் வசாய் பகுதியில் நடந்திருப்பதால் வழக்கை அங்குள்ள போலீஸ் நிலையத்திற்கு மாற்றினர். ஆனால் வசாய் போலீஸார் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தனர். சிறுமியின் தந்தை குற்றவாளி மீது நடவடிக்கை எடுக்க வசாய் போலீஸ் நிலையத்திற்கு அலைந்து கொண்டிருந்தார்.
நீண்ட இழுபறிக்கு பிறகு வசாய் போலீஸார் பியரல் பூரியை இவ்வழக்கில் இப்போது கைது செய்துள்ளனர். மும்பை அந்தேரியில் உள்ள அவரது வீட்டிற்கு சென்ற வசாய் போலீஸார் நடிகரை விசாரணைக்காக உள்ளூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். விசாரணைக்கு பிறகு அவர் கைது செய்யப்பட்டார். இது குறித்து வசாய் பகுதி டிசிபி சஞ்சய் பாட்டீல் கூறுகையில், “பாலியல் பலாத்கார வழக்கு 2019-ம் ஆண்டு வர்சோவாவில் பதிவு செய்யப்பட்டு வசாயிக்கு மாற்றப்பட்டது.
இவ்வழக்கில் குற்றவாளி பியரல் பூரி கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் வைக்கப்பட்டு இருக்கிறார்” என்றார். இதில் சம்பவம் குறித்து சிறுமியின் தாயாருக்கு தெரிந்து இருந்தும் அது குறித்து போலீஸாரிடம் தெரிவிக்கவில்லை. எனவே சிறுமியின் தாயார் மீதும் நடவடிகை எடுக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர் எனக் கூறப்படுகிறது.
Discussion about this post