முப்படைத் தளபதி ஜெனரல் அனில் சவுகான் கூறியதாவது, “இந்தியாவை ஆயிரம் வெட்டுகளால் சோர்வடையச் செய்யும் நோக்கத்துடன் பாகிஸ்தான் செயல்படுகிறது” என்றார்.
புனேவில் உள்ள சாவித்ரிபாய் புலே பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய அவர், “ஆபரேஷன் சிந்தூர் என்ற ராணுவ நடவடிக்கையின் போது, ஆரம்பத்திலேயே இந்தியா சில போர் விமானங்களை இழந்ததாக நான் குறிப்பிட்டேன். எங்கள் பக்கத்திலுள்ள இழப்புகள் குறித்தே கேட்டபோது, அதை வெளிப்படையாக கூறினேன். எனினும், இழப்புகளே முக்கியமல்ல; அவற்றுக்குப் பின்னால் இருக்கும் செயல்திறனே முக்கியமானது.
போரில் பின்னடைவுகள் ஏற்படலாம், ஆனால் அந்த நேரங்களில் மன உறுதியைக் காத்துக்கொள்ள வேண்டும். இழப்புகளுக்கு மேல் விளைவுகளே முக்கியம். ஒரு போர் நிகழும்போது, அதனுடன் அரசியல் மற்றும் பிற அம்சங்களும் இணைந்து செயல்படுவன. ஆபரேஷன் சிந்தூரும் அரசியல்-போர் ஒன்றிணைந்த நிகழ்வாகவே இருந்தது,” என்றார்.
பஹல்காம் தாக்குதலுக்கு முன், பாகிஸ்தான் ராணுவத் தலைவரான ஜெனரல் அசிம் முனீர் இந்தியா மற்றும் இந்துக்களுக்கெதிராக தீவிரமாக பேசினார். இந்தியாவை ஆயிரம் சிறு தாக்குதல்களால் சோர்வடையச் செய்யவே பாகிஸ்தானின் செயற்பாடுகள் அமைந்துள்ளன. பஹல்காமில் ஏற்பட்ட பாதிப்புகள் மிகக் கொடுமையானவை.
பாகிஸ்தானிலிருந்து அரசின் ஆதரவில் நடைபெறும் தீவிரவாதம் நிறுத்தப்பட வேண்டும். தீவிரவாதத்தின் மூலம் இந்தியாவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியாது என்பதே ஆபரேஷன் சிந்தூரின் பிரதான நோக்கம். தீவிரவாதம் மற்றும் அணு ஆயுத அச்சுறுத்தலின் கீழ் இந்தியா வாழ அனுமதிக்கபட மாட்டாது. பாகிஸ்தானில் உள்ள இலக்குகளுக்கு இந்தியா மேற்கொண்ட தாக்குதல்கள் மிகவும் கூர்மையானவையாக இருந்தன — சில தாக்குதல்களில் இலக்குகள் வெறும் இரண்டு மீட்டர் இடைவெளியில் மட்டுமே இருந்தன.
மே 10-ஆம் தேதி அதிகாலை 1 மணிக்கு தொடர் தாக்குதல்களை நிகழ்த்த பாகிஸ்தான் திட்டமிட்டிருந்தது. 48 மணி நேரத்தில் இந்தியா சரணடைய வேண்டும் என்பதே அவர்களின் எண்ணமாக இருந்தது. ஆனால் அந்த நடவடிக்கை எட்டு மணி நேரத்தில் முடிவுக்கு வந்தது. அதே நாளில், பாகிஸ்தான் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த விருப்பம் தெரிவித்தது. ஏனெனில், தொடர்ந்து தாக்குதல் நடத்தும் நிலை இருந்தால் அது பாகிஸ்தானுக்கே தீங்கு விளைவிக்கும் என்பதை அவர்கள் உணர்ந்தனர்.
48 மணி நேரம் ஆகும் என நினைத்த தாக்குதல், எட்டு மணி நேரத்தில் முடிவுற்றது. பாகிஸ்தான் பேச தயாராக இருந்தது.
அந்த பேச்சுவார்த்தை முயற்சியை நாங்களும் ஏற்றுக்கொண்டோம். இந்நடவடிக்கையின் மூலம் நமது நிலைப்பாட்டையும் உயர்த்தியுள்ளோம். நாம் பயங்கரவாதத்தை ‘தண்ணீருடன்’ — குறிப்பாக சிந்து நீர் ஒப்பந்தத்துடன் — இணைத்து கருதுகிறோம். மேலும், தீவிரவாதத்தை எதிர்த்த புதிய ராணுவக் கோட்பாட்டை உருவாக்கியுள்ளோம்” என்று கூறினார்.