இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட மோதலின்போது, அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் தொலைபேசியில் அழைத்துப் பேசினார், அச்சமயம் பிரதமர் நரேந்திர மோடி சரணடைந்துவிட்டதாக ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்தார்.
மத்தியப் பிரதேசத்தின் தலைநகர் போபாலில் நடைபெற்ற காங்கிரஸ் தொண்டர்களின் கூட்டத்தில் பேசினார் ராகுல் காந்தி. அவர் கூறியதாவது: “நாட்டில் தற்போது ஒரு சித்தாந்த மோதல் நடைபெற்று வருகிறது. ஒருபுறம் காங்கிரஸ் மற்றும் அரசியலமைப்பு இணைந்து செயல்படுகின்றன. மறுபுறம், அரசியலமைப்பை முற்றுப்படுத்த விரும்பும் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் போன்ற அமைப்புகள் இருக்கின்றன. அவர்கள் தேசத்தின் முக்கிய நிறுவனங்களை தத்தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, நாடு சுவாசிக்க முடியாத நிலையை உருவாக்குகிறார்கள்.
இரண்டாவது மோதல் சமூக நீதி சார்ந்தது. மக்களவையிலும் மாநிலங்களவையிலும் சாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதற்காக நான் போராடுகிறேன், மக்களவையில் இது தொடர்பாக உறுதியும் தெரிவித்தேன். பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் பற்றிய எனது அறிவு தெளிவானது. அவர்களை சற்றே அழுத்தினாலே போதும், அவர்கள் அச்சப்படுகிறார்கள். ட்ரம்ப் தொலைபேசியில் ‘நரேந்திரா, சரணடை’ என்றபோது மோடி உடனே அதற்கு தலைவணங்கினார். இதுவே பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகளின் இயல்பு – அவர்கள் எப்போதும் விலகிச் செல்வதற்கும், கீழ்ப்படியத்தற்கும் தயாராகவே இருக்கின்றனர்.
ஆனால் காங்கிரஸின் வரலாறு முற்றிலும் மாறுபட்டது. 1971-ஆம் ஆண்டு, அமெரிக்காவின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல், இந்தியா பாகிஸ்தானைத் தோற்கடித்தது. காங்கிரஸின் வீரர்கள், உலக வல்லரசுகளின் அழுத்தத்திற்கே தடையாக நின்றனர். அவர்கள் ஒருபோதும் அடிமையாக இருக்கவில்லை.
இப்போது, சீனாவில் தயாராகும் அனைத்து பொருட்களையும் இந்தியாவில் அதானி விற்கிறார். இந்த பொருட்கள் மூலம் அதானியும் அம்பானியும் பெரும் லாபம் ஈட்டுகின்றனர். சீன பொருட்கள் இந்திய சந்தையை நிரப்பிவிட்டன. இதனால் இந்தியாவில் விற்பனையாகும் செல்போன்களின் மூலம் வேலை வாய்ப்பு பெறுவது சீன இளைஞர்கள், இந்திய இளைஞர்கள் அல்ல” என்றார் ராகுல் காந்தி.