ட்விட்டரில் அதிகாரப்பூர்வ கணக்குகளை அடையாளம் கண்டுகொள்ளும் வகையில், அதிகாரப்பூர்வ கணக்கின் பெயருக்குப் பக்கத்தில் ப்ளூ-டிக் வழங்கப்பட்டிருக்கும். இந்தநிலையில், குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவின் தனிப்பட்ட கணக்கிலிருந்து ப்ளூ-டிக்கை ட்விட்டர் நிறுவனம் நீக்கியுள்ளது.
விவசாயிகள் போராட்டம் தொடர்பாக மத்திய அரசுக்கும், ட்விட்டர் நிறுவனத்துக்கும் வெடித்த மோதல், சமூகவலைதளங்களுக்காக மத்திய அரசு அறிவித்த புதிய விதிமுறைகள்வரை நீள்கிறது. இந்தச் சூழ்நிலையில், குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவின் தனிப்பட்ட கணக்கிலிருந்து ப்ளூ-டிக் நீக்கப்பட்டது பரபரப்பைக் கிளப்பியது.
ஆனால் வெங்கையா நாயுடுவின் தனிப்பட்ட கணக்கு, தொடர்ந்து செயல்பாட்டில் இல்லாததால், ப்ளூ-டிக் நீக்கப்பட்டதாக குடியரசு துணைத் தலைவர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த ஆண்டு ஜூலை மாதத்திற்குப் பிறகு வெங்கையா நாயுடுவின் தனிப்பட்ட கணக்கிலிருந்து எந்த ட்வீட்டும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ட்விட்டர் நிறுவன விதிமுறைப்படி, அதிகாரப்பூர்வ கணக்கு தொடர்ந்து செயல்பாட்டில் இல்லையென்றால் அந்தக் கணக்கின் ப்ளூ-டிக் நீக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
வெங்கையா நாயுடுவின் தனிப்பட்ட கணக்கிலிருந்து நீக்கப்பட்ட ப்ளூ-டிக் சில மணி நேரங்களில் திருப்பி வழங்கப்பட்டது. குடியரசு துணைத் தலைவர் அலுவலகத்திலிருந்து ஆட்சேபனை தெரிவிக்கப்பட்ட பிறகு, ப்ளூ-டிக் திரும்ப வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. குடியரசு துணைத் தலைவருக்கான அதிகாரப்பூர்வ கணக்கு தனியே செயல்படுகிறது. அந்தக் கணக்கில் ட்விட்டர் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post