பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக ராஜஸ்தான் அரசு ஊழியர் கைது
ராஜஸ்தானின் ஜெய்சால்மரில் உதவி நிர்வாக அதிகாரியாக பணியாற்றிய ஷகூர் கான் என்பவர், பாகிஸ்தானின் இரகசிய போலீஸ் அமைப்பான ஐஎஸ்ஐக்காக உளவு பார்த்ததாக குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டார். அவர், முக்கிய ஆவணங்களை ஐஎஸ்ஐ முகவர்களுக்கு அனுப்பியதாக புகார் எழுந்துள்ளது.
ஜெய்சால்மர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பணிபுரிந்த ஷகூர் கான் மீது, மாநில உளவுத்துறையினர் கடுமையான உளவு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்தனர். பாகிஸ்தானின் தூதரகத்தில் பணியாற்றிய டேனிஷ் (அஹ்சன்-உர்-ரஹீம்) மற்றும் சோஹைல் கமர் ஆகியோருடன் அவர் தொடர்பில் இருந்தது கண்காணிப்பில் தெரியவந்ததாக, ராஜஸ்தான் சிஐடி தலைவர் விஷ்ணு காந்த் குப்தா தெரிவித்தார். டேனிஷ் இந்தியாவால் ‘விரும்பத்தகாத நபர்’ என அறிவிக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டவராவார்.
ஜெய்ப்பூரில் நடைபெற்ற விசாரணையின் போது, ஷகூர் கான் பாகிஸ்தானுக்குச் சென்று, அங்கு ஐஎஸ்ஐ முகவர்களை சந்தித்ததும், பின்னர் இந்தியாவுக்கு திரும்பியதும், அவர்கள் கேட்கும் தகவல்களை வாட்ஸ்அப் போன்ற செயலிகளின் மூலம் அனுப்பியதும் உறுதி செய்யப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.
இந்தியாவின் அதிகாரப்பூர்வ ரகசியச் சட்டம், 1923ன் கீழ் ஷகூர் கான்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது.