உத்தரப்பிரதேச முதல்வராகத் தொடர யோகி ஆதித்யநாத்திற்கு பாஜக தலைமை முழு ஆதரவளித்துள்ளது. 2022 இன் சட்டப்பேரவை தேர்தலுக்காக 2 நாள் முகாமிட்ட இரண்டு தேசியத் தலைவர்கள், அமைச்சரவையில் மட்டும் மாற்றம் செய்யப் பரிந்துரைத்துள்ளார்.
உ.பி.யின் சட்டப்பேரவைக்கு அடுத்த வருடம் 2022 இல் தேர்தல் நடைபெற உள்ளது. இதன் ஆலோசனைக்காக பாஜக தலைமை தனது தேசியப் பொதுச்செயலாளர்களான பி.எல்.சந்தோஷ் மற்றும் ராதா மோகன் சிங் ஆகியோரை லக்னோ அனுப்பி இருந்தது.
கடந்த இரண்டு நாட்களாக அவர்கள் உ.பி.யின் பாஜக நிர்வாகிகள் மற்றும் மாநில அமைச்சர்களுடன் ரகசிய ஆலோசனை நடத்தினார். பிறகு பாஜகவின் தாய் அமைப்பான ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங்கத்தின் அலுவலகம் சென்றும் ஆலோசனை செய்தனர்.
இவர்கள் இருவரும், பிரதமர் நரேந்தர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு மிகவும் நெருக்கமானவர்களாகக் கருதப்படுகின்றனர். இவர்களை 2022 சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக ஆட்சி நிர்வாகத்தில் மற்றம் செய்ய வேண்டுமா? என அறிந்து வர அனுப்பியதாகக் கூறப்பட்டது.
இதனால், இன்று டெல்லி திரும்பியவர்களின் முடிவுகளை அறிய உ.பி. பாஜக ஆர்வமுடன் காத்திருந்தது. இதில், முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் பதவிக்கு ஆபத்து வரும் வாய்ப்புகள் உள்ளதாகவும் அஞ்சப்பட்டது.
இந்நிலையில், இன்று காலை பாஜக நிர்வாகத்தின் தேசியப் பொதுச்செயலாளரான பி.எல்.சந்தோஷ் தனது கருத்தை ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். அதில் அவர், கோவிட் 19 பரவல் சூழலில் உ.பி. ஆட்சி நிர்வாகம் மிகவும் சிறப்பாக நிர்வாகத்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மற்றொரு பொதுச்செயலாளராரும் உ.பி. மாநில பொறுப்பாளருமான ராதா மோகன் சிங்கும் முதல்வர் யோகிக்கு ஆதரவான கருத்துக்களையே பரிந்துரைத்ததாகத் தெரிகிறது. எனவே, உ.பி.யில் முதல்வர் யோகிக்கு மாற்றத் தலைவர்கள் கிடையாது என பாஜக தலைமை முடிவு செய்துள்ளது.
எனினும், சில அமைச்சர்கள் தங்கள் பணியில் சுணக்கம் காட்டுவதால் அவர்களை மட்டும் மாற்றி அமைத்தால் போதுமானதாகவும் தலைமைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதன் மூன்று அமைச்சர்கள் கரோனாவிற்கு பலியான நிலையில் அப்பதவிகள் இன்னும் காலியாகவே உள்ளன.
இவற்றை உ.பி.யின் சமூகங்களை அனுசரிக்கும் வகையில் தேர்தலுக்கு முன்பாக மாற்றி அமைக்கும் வாய்ப்புகள் உள்ளன. உ.பி.யின் அடுத்த சட்டப்பேரவை தேர்தலிலும் முதல்வர் வேட்பாளராக யோகி முன்னிறுத்தப்படுவார் என்பது உறுதியாகி உள்ளது.
கடந்த 2017 சட்டப்பேரவை தேர்தலில் உ.பி.யின் பல்வேறு சமூகங்களுக்கு ஏற்றவாறு அதன் தலைவர்கள் பாஜகவால் களம் இறக்கப்பட்டனர். முன்னாள் முதல்வர் ராஜ்நாத்சிங், முன்னாள் அமைச்சரான கல்ராஜ் மிஸ்ரா, உ.பி. தலைவர்களான மனோஜ் சின்ஹா மற்றும் கேசவ் பிரசாத் மவுரியா ஆகியோர் தீவிரப் பிரச்சாரம் செய்தனர்.
வெற்றிக்கு பின் முதல்வர் பதவிக்காக ராஜ்நாத்சிங் உபி பாஜகவினரின் முதல் விருப்பமானார். ஆனால், அவர் மத்திய அமைச்சரவையில் தொடர விரும்பி முதல்வர் பதவிக்கு மறுத்து விட்டார்.
கல்ராஜ் மிஸ்ராவை ராஜஸ்தானிலும், மனோஜ் சின்ஹாவை ஜம்மு-காஷ்மீரிலும் ஆளுநர் பதவிகளில் அமர்த்தப்பட்டனர். கேசவ் பிரசாத் மவுரியா துணை முதல்வராக்கப்பட்டார்.
இந்த பதவிக்கே இதுவரையும் முயற்சிக்காத யோகி அவரது இந்துத்துவா கொள்கையால் திடீர் என முதல்வராக அமர்த்தப்பட்டார். தனது இந்துத்துவா கொள்கைக்கு தொடந்ர்து கிடைக்கும் வரவேற்பால் யோகியையே அடுத்த தேர்தலிலும் முதல்வராக முன்னிறுத்தி பாஜக முடிவு செய்துள்ளது.
Discussion about this post