வக்பு சொத்துகளை பதிவு செய்யவும், சரிபார்க்கவும் மற்றும் கண்காணிக்கவும் மத்திய அரசு சார்பில் ‘உமீத் (UMEED)’ என்ற புதிய இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதை மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தொடங்கி வைத்தார்.
இந்த இணையதளம், இந்தியாவின் வக்பு சொத்துத் துறையின் வளர்ச்சியில் ஒரு முக்கியமான புதிய அத்தியாயமாக கருதப்படுகிறது. இது, வெளிப்படைத்தன்மையை அதிகரிக்க உதவுவதோடு, முஸ்லீம் மக்களுக்கும், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கும் பயனளிக்கும் என அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறினார்.
‘உமீத்’ இணையதளத்தை தொடங்கிய போது, இது தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு அப்பாற்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும், சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாக்கும் அரசுத் திட்டத்தின் பிரதிநிதியாகவும் இருப்பதாக அவர் தெரிவித்தார். வக்பு சொத்துகள், ஏழை முஸ்லீம்களுக்கு நியாயமான முறையில் பயன்பட வேண்டும் என்பதற்கு இது உறுதிப்படுத்தும் ஒரு முயற்சியாகவும் செயல்படும் என அவர் கூறினார்.
இந்த மையப்படுத்தப்பட்ட டிஜிட்டல் தளம், வக்பு சொத்துகளின் உண்மையான நேர பதிவு, சரிபார்ப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் பங்கேற்ற இணை அமைச்சர் ஜார்ஜ் குரியன், இந்த இணைய தளம், நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சீர்திருத்த முயற்சியாகவும், வக்பு சொத்துகள் தவறான முறையில் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கும் கருவியாகவும் செயல்படும் என்றார். மேலும், இது மக்களுக்கு வக்பு நிர்வாகத்தை நெருக்கமாக கொண்டு வரக்கூடிய நடவடிக்கையாகவும் இருக்கும் என்று தெரிவித்தார்.
மத்திய அரசு அளித்த தகவலின்படி, நாட்டில் 8.7 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்துகள் வக்பு சொத்துகளாக பதிவு செய்யப்பட்டுள்ளன. அதே நேரத்தில், 4.2 லட்சத்துக்கும் அதிகமான சொத்துகள் உரிய ஆவணங்கள் இல்லாமல் வக்பு சொத்துகளாக நீண்ட காலமாக இருந்து வருகின்றன. வக்பு சொத்துகள் மொத்தம் 39 லட்சம் ஏக்கர் பரப்பளவைக் கொண்டுள்ளன என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.