மத்திய பட்ஜெட்டில் புதிய வருமான வரி வரம்பு அறிவிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. பொதுவாக மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் போதெல்லாம் வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் வருமா என்பதே சாமானியர்களின் எதிர்பார்ப்பு.
நிர்மலா சீதாராமன் மீண்டும் மத்திய நிதியமைச்சராக பதவியேற்க வாய்ப்புள்ள நிலையில், 2024-25 நிதியாண்டுக்கான முழு நீள பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.
இந்த முறை மோடி 3.0 அரசு வருமான வரி வரம்பில் மாற்றங்களை அறிவிக்க வாய்ப்புள்ளது. எனவே, வருமான வரி விதிப்பில் மத்திய அரசு மாற்றம் கொண்டு வருமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
புதிய வருமான வரி முறை நடைமுறைக்கு வந்துள்ளதால், புதிய வருமான வரி வரம்புகள் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக, வருமான வரி விகிதங்கள் குறைக்கப்படலாம் என்றும், ஆண்டுக்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்கள் வரி விகிதத்தில் குறைப்பு அல்லது வரி வரம்பில் மாற்றம் ஏற்படலாம் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த புதிய அறிவிப்பால் சம்பளம் பெறும் நபர்களும் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறைகளை எளிமையாக்குவது தொடர்பான அறிவிப்புகளும் இந்த பட்ஜெட்டில் இடம்பெறலாம் என தெரிகிறது. இது தொடர்பான ஆலோசனைகள் ஆரம்ப கட்டத்தில் இருப்பதாகவும், இது தொடர்பான இறுதி முடிவு பிரதமர் அலுவலகத்தில் எடுக்கப்படும் என்றும் தெரிகிறது.
எனவே, வரும் மத்திய பட்ஜெட் நடுத்தர மக்களுக்கும், குறிப்பாக வருமான வரி செலுத்தும் தனி நபர்களுக்கும் மகிழ்ச்சியான செய்தியாக அமையும் என்று கூறப்படுகிறது.
முன்னதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், மாநில அமைச்சர்கள் மற்றும் தொழில் துறையினருடன் பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். MSME துறைகளை ஊக்குவிக்கும் வகையில் அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என்று தொழில் வல்லுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு கடந்த பிப்ரவரி மாதம் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். தற்போது தேர்தல் முடிந்து முடிவுகள் வெளியாகி மீண்டும் மோடி அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில் முழு நீள பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.
என்ன மாதிரியான அறிவிப்புகள் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது. கூட்டணியின் உதவியுடன் பாஜக ஆட்சி அமைத்திருப்பதால் மக்கள் நலன் தொடர்பான சில அறிவிப்புகள் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.
Discussion about this post