இந்திய வணிகச் சந்தையின் வளர்ச்சியைக் காட்டும் வகையில், ஜிஎஸ்டி வரி வசூல் விவரங்களை ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் அதிகாரப்பூர்வமாக வெளியிடும் நடைமுறையை மத்திய நிதி அமைச்சகம் பல ஆண்டுகளாகப் பின்பற்றி வருகிறது.
இந்நிலையில் ஜூன் மாதத்துக்கான விவரங்களை மத்திய நிதி அமைச்சகம் மாலை வரை வெளியிடவில்லை. இந்நிலையில், இதுகுறித்து நிதியமைச்சகத்திடம் விசாரித்தபோது, மாதந்தோறும் ஜிஎஸ்டி வரி வசூல் அளவீட்டை வெளியிடும் வழக்கம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படலாம் என தகவல் கிடைத்தது.
அதே சமயம், ஜிஎஸ்டி வசூல் அளவீட்டு அறிக்கையின் வடிவம், முன்பு வெளியிடப்பட்ட விரிவான தகவல்களுடன் மாற்றப்பட்டு, சுருக்கமான தகவல்களுடன் புதிய வடிவம் அறிமுகப்படுத்தப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் மாதத்தில் நாட்டின் மொத்த ஜிஎஸ்டி வசூல் ரூ.1.74 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இது மே 2024ல் வசூலான ரூ.1.73 லட்சம் கோடியை விட அதிகம்.மேலும், ஜூன் 2023ல் வசூலான ரூ.1.61 லட்சம் கோடியை விட இது 8 சதவீதம் அதிகம்.ஆனால், மத்திய அரசு இதுவரை அதிகாரபூர்வ வரி வசூல் அறிக்கையை வெளியிடவில்லை.
ஜிஎஸ்டி வரி வசூல் வெளியீட்டில் “தெளிவு” கொண்டுவர நிதி அமைச்சகம் மாற்றத்தை முன்மொழிகிறது. இதனையடுத்து, மாதாந்திர ஜிஎஸ்டி வரி வசூல் குறித்த சுருக்க அறிக்கை வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.
இந்தியாவின் முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் சமூக ஊடகங்களில் ஜிஎஸ்டி வரி புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டதை விமர்சித்திருந்தார். மொத்த வரி வசூல் பற்றி பெருமையாக பேசுவதற்கு பதிலாக, பணத்தை திரும்பப் பெற்ற பிறகு வருவாயில் கவனம் செலுத்த வேண்டும் என்று அரவிந்த் சுப்பிரமணியன் கூறியிருந்தார்.
நிதி அமைச்சகம் தயாரித்து வரும் புதிய திருத்தப்பட்ட ஜிஎஸ்டி வரி படிவத்தில் மொத்த வரி வசூல், மத்திய ஜிஎஸ்டி மற்றும் மாநில ஜிஎஸ்டி வரி வசூல் பற்றிய முக்கிய தகவல்கள் மட்டுமே இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும், சுருக்க அறிக்கையை வெளியிடுவது தொடர்பில் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.
Discussion about this post