மகாராஷ்டிராவில் கர்ப்பிணிகள் உள்ளிட்ட சிலருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதால், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மற்றும் புனேவில் கர்ப்பிணிகள் உட்பட சிலருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கர்ப்பிணிப் பெண்களுக்கு நோய்த் தொற்று ஏற்பட்டால், வளரும் குழந்தையைப் பாதிக்கும் என்பதால், கர்ப்பிணிப் பெண்களுக்கு உரிய பரிசோதனை நடத்துமாறு மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
பகலில் கடிக்கும் ஏடிஸ் கொசுக்களால் ஜிகா வைரஸ் பரவுவதால் மருத்துவமனை சுகாதாரத்தை பராமரிக்க கண்காணிப்பு அதிகாரிகளை உடனடியாக நியமிக்குமாறு மாநில அரசுகளை மத்திய சுகாதார அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
இதுதவிர, குடியிருப்பு பகுதிகள், பணியிடங்கள், பள்ளிகள், கட்டுமான பணியிடங்கள் மற்றும் பிற பகுதிகளில் கிருமிநாசினி தெளித்து தூய்மையை பராமரிக்கவும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.