ஜம்முவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
ஜம்முவின் கதுவா மாவட்டத்தில் உள்ள மஸ்செடி பகுதியில் இந்திய ராணுவ வாகனம் ஒன்று நேற்று மாலை ரோந்து சென்று கொண்டிருந்தது. மலைப்பாங்கான பகுதியில் சென்று கொண்டிருந்த ராணுவ வாகனம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். மலைப்பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் ராணுவ வாகனம் மீது கையெறி குண்டுகளை வீசி துப்பாக்கியால் சுட்டனர். இந்த தாக்குதலுக்கு பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர்.
இருப்பினும் தீவிரவாதிகள் தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். 6 வீரர்கள் பலத்த காயம் அடைந்தனர். இதையடுத்து, கூடுதல் பாதுகாப்புப் படையினர் அப்பகுதிக்கு விரைந்தனர். மேலும், பலத்த காயம் அடைந்த ராணுவ வீரர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், தீவிரவாத தாக்குதலில் பலத்த காயமடைந்த மற்றொரு ராணுவ வீரர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, ஜம்மு பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த பாதுகாப்புப் படையினரின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், தாக்குதல் நடந்த இடத்தை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மலைப்பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது.
Discussion about this post