2024-25ஆம் நிதியாண்டுக்கான முழு பட்ஜெட் ஜூலை 23ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், பட்ஜெட்டுக்கான ஆலோசனைகளைப் பெறுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று டெல்லியில் உள்ள மத்திய அரசின் சிந்தனைக் குழுவான நிதி ஆயோக் அலுவலகத்தில் நாட்டின் உயர்மட்ட பொருளாதார நிபுணர்களுடன் முக்கியமான ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார்.
கூட்டத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நிதி ஆயோக் துணைத் தலைவர் சுமன் பெரி, பிரதமரின் முதன்மைச் செயலாளர் பி.கே.மிஸ்ரா மற்றும் முன்னணி பொருளாதார நிபுணர்கள் மற்றும் நிபுணர்கள் கலந்து கொண்டனர்.
ரஷ்யா-ஆஸ்திரியா சுற்றுப்பயணத்திற்குப் பிறகு, வியாழன் அன்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், முன்னணி பொருளாதார நிபுணர்களுடனான பிரதமர் நரேந்திர மோடியின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
இந்தியா தற்போது ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக இருக்கும் நிலையில், இந்த பட்ஜெட் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் மூலம் இந்தியாவை உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாற்றும் இலக்கை மையமாக வைத்து கூட்டத்திற்கு பிரதமர் தலைமை தாங்கினார்.
மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பு, கள நிலவரங்கள், மத்திய அரசின் பரிந்துரைகள், தொழில்துறையின் கோரிக்கைகள் மற்றும் எதிர்கால வளர்ச்சிக்கான இலக்குகள் ஆகிய நான்கு தூண்களையும் இணைத்து பட்ஜெட் தயாரிக்கவும் வளர்ச்சித் திட்டங்களை உருவாக்கவும் உதவியது. இதன் அடிப்படையில் தான் ரஷ்யா-ஆஸ்திரியா சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி இந்த சந்திப்பை நடத்தியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் மூன்றாவது பதவிக்காலத்தில் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் அதிகப்படியான வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகிய இரண்டு முக்கிய கருத்துக்கள் குறித்து கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இதேபோல், புதிய மற்றும் நிலுவையில் உள்ள கொள்கை சீர்திருத்தங்கள் மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கான நிதி முதலீட்டு உத்திகள் உள்ளிட்ட அனைத்து முக்கிய கொள்கை விவகாரங்கள் குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
மத்திய பார்லிமென்டின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜூலை 22ம் தேதி தொடங்குகிறது.இதையடுத்து, வரும் 23ம் தேதி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2024-25ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை, டிஜிட்டல் பட்ஜெட் அறிக்கையாக, பார்லிமென்டில் தாக்கல் செய்ய உள்ளார். நரேந்திர மோடி அரசின் மூன்றாவது ஆட்சியின் முதல் பட்ஜெட் என்பதால் கூடுதல் கவனம் பெறுகிறது.
பிப்ரவரி மாதம் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளதால் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post