வரும் 23ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதால், ரயில்வே துறை மேம்பாடு குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாதுகாப்பு மற்றும் அதிக பயணிகளை கையாளும் திறனுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2017 முதல், ரயில்வே துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. ரயில்வே தொடர்பான அறிவிப்புகளும் பொது நிதிநிலை அறிக்கையிலேயே வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, 2024-2025ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் வரும் 23ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
மோடி 3.0 அரசு அமைந்த பிறகு தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் என்பதால், இதன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. குறிப்பாக தனிநபர் வருமான வரி உச்சவரம்பு உயர்வு, ரயில் பயணிகளை கவரும் வகையில் அறிவிப்புகள் வெளியிடப்பட்டால் நன்றாக இருக்கும் என பல்வேறு தரப்பினரும் கூறி வருகின்றனர்.
2020க்கு முன் மூத்த பெண் குடிமக்களுக்கான டிக்கெட் விலையில் 50 சதவீதம்
ஆண் மூத்த குடிமக்கள் மற்றும் திருநங்கைகளுக்கு 40 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டது. கொரோனா காலத்தில் இந்த சலுகை நிறுத்தப்பட்டது. இந்நிலையில், வரும் பட்ஜெட்டில் மூத்த குடிமக்களுக்கான டிக்கெட் சலுகை மீண்டும் வழங்கப்படலாம் என தெரிகிறது. அனைவருக்கும் வழங்காமல், கேட்பவர்களுக்கு மட்டும் சலுகை அளிக்கப்படலாம் அல்லது இரண்டாம் வகுப்பில் பயணிக்கும் மூத்த குடிமக்களுக்கு டிக்கெட் விலையில் சலுகை அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாற்றுத்திறனாளிகள், 11 வகை நோயாளிகள், 8 வகை மாணவர்களுக்கு வழங்கப்படும் கட்டணச் சலுகை அவர்களுக்கும் கிடைத்தால் நல்லது என மூத்த குடிமக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும், ரயில் விபத்துகளைத் தவிர்க்கவும் பொதுப் பெட்டிகளில் இடத்தை அதிகரிக்க அதிக கவனம் செலுத்தப்படும் எனத் தெரிகிறது. இப்பணிகளை மேற்கொள்ள பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படும் என கூறப்படுகிறது.
புதிய ரயில் பாதைகளை உருவாக்குதல், தற்போதுள்ள ரயில்வேயை மேம்படுத்துதல், ரயில் ஓட்டுனர் பணியில் ஆள் பற்றாக்குறையை போக்குதல் உள்ளிட்டவை தொடர்பான அறிவிப்புகள் வெளியாகலாம் என கூறப்படுகிறது. மேலும் மெட்ரோ ரயில், வந்தே பாரத் ரயில்கள் அதிகரிப்பு உள்ளிட்ட திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Discussion about this post