அனைத்து பிரச்னைகள் குறித்தும் நாடாளுமன்றத்தில் விவாதிக்க தயார் என எதிர்க்கட்சிகளுக்கு மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் கடந்த ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் 7 கட்டங்களாக நடைபெற்றது. ஜூன் 4ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடந்தது.ஓட்டு எண்ணிக்கை முடிவில் எந்த கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் பாஜக கூட்டணி ஆட்சி அமைத்தது. கடந்த ஜூன் 9ம் தேதி நரேந்திர மோடி 3வது முறையாக பிரதமராக பதவியேற்றார். 71 மத்திய அமைச்சர்களும் பதவியேற்றனர்.
18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த மாதம் நடைபெற்றது. புதிய எம்.பி.க்கள் பதவியேற்று 2 நாட்கள் ஆகிறது. இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி திராருபதி முர்மு உரையாற்றினார். அவரது பேச்சுக்கு நன்றி தெரிவிக்கும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. பிரதமர் மோடி பதில் அளித்து பேசினார்.
இதையடுத்து இன்று (திங்கட்கிழமை) நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்கிறார்.
நாளை (செவ்வாய்கிழமை) நடப்பு 2024-2025 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை அவர் தாக்கல் செய்கிறார். நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில், கடந்த பிப்ரவரி 1-ம் தேதி மத்திய இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதன்படி நாளை அவர் முழு மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். அவர் தாக்கல் செய்யும் 7வது மத்திய பட்ஜெட் இதுவாகும்.
மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 12ம் தேதி வரை நடக்கிறது.அதாவது 19 அமர்வுகள் நடக்கிறது. 6 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 90 வருடங்களாகப் பழமையான விமானப் போக்குவரத்துச் சட்டத்தை மாற்றுவதற்கான மசோதாவும் அவற்றில் அடங்கும். குடியரசுத் தலைவர் ஆட்சியில் உள்ள காஷ்மீருக்கான மத்திய பட்ஜெட்டுக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதலையும் மத்திய அரசு கோருகிறது.
நீட் தேர்வு முறைகேடுகள், ரயில் விபத்துகள், வேலையில்லா திண்டாட்டம் போன்ற பிரச்னைகளை எழுப்பி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
இதனிடையே மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவதற்காக டெல்லியில் நேற்று அனைத்து கட்சி கூட்டத்தை மத்திய அரசு நடத்தியது. பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமை தாங்கினார். ராஜ்நாத் சிங் மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ ஆகியோர் மத்திய அரசின் நிலைப்பாட்டை எடுத்துரைத்தனர்.
அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்குப் பிறகு, நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு செய்தியாளர்களிடம் பேசுகையில், “அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் 44 அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 55 தலைவர்கள் கலந்து கொண்டனர். பயனுள்ள விவாதம் நடைபெற்றது. இது மத்திய அரசின் கூட்டுப் பொறுப்பு. எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை சுமூகமாக நடத்த வேண்டும், எந்த ஒரு பிரச்சினையையும் நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும். மத்திய அரசு தயாராக உள்ளது,” என்றார்.