கேரளாவில் நிபா வைரஸ் தாக்குதலுக்கு ஒரு சிறுவன் உயிரிழந்துள்ள நிலையில், அதனை கட்டுப்படுத்த அம்மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நிபா வைரஸ் எப்படி பரவுகிறது? பின்விளைவுகள் என்ன? அதைப் பற்றி பார்ப்போம்.
நிபா வைரஸ் ஜூனோடிக் நோய் வகையைச் சேர்ந்தது. அதாவது கொரோனா வைரஸைப் போலவே விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கும் பரவும். வௌவால்கள் உண்ணும் பழங்கள் மூலம் நிபா வைரஸ் பரவ வாய்ப்புள்ளது. சுகாதாரமற்ற உணவை உட்கொள்வதன் மூலமோ அல்லது பாதிக்கப்பட்ட நபருடன் நேரடியாக தொடர்பு கொள்வதன் மூலமோ வைரஸ் பரவுகிறது.
நிபா தொற்று மூன்று வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது: அறிகுறியற்ற தொற்று, கடுமையான சுவாச தொற்று மற்றும் மூளையழற்சி.
நோய்த்தொற்று ஏற்பட்ட 4 முதல் 14 நாட்களுக்குப் பிறகு நிபா அறிகுறிகள் தோன்றத் தொடங்கும்.
காய்ச்சல், தலைவலி, தசைவலி, இருமல், வாந்தி மற்றும் தொண்டை வலி போன்ற அறிகுறிகள் ஆரம்ப நிலையில் ஏற்படும்.
பின்னர் மயக்கம், தூக்கமின்மை, நரம்பியல் பிரச்சனைகள், சுவாச பிரச்சனைகள், மனநல பிரச்சனைகள், நிமோனியா, கோமா போன்ற தீவிர விளைவுகள் ஏற்படலாம்.
அறிகுறிகள் உள்ளவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் 21 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட வேண்டும். அவர்கள் உடனடியாக மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். கொட்டைகள் மற்றும் பழங்களை நன்கு கழுவி பயன்படுத்த வேண்டும். மக்கள் கிணறுகள், குகைகள், தோட்டங்கள் மற்றும் இருண்ட இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.
நோயாளிகளைப் பரிசோதிக்கும் சுகாதாரப் பணியாளர்கள் தகுந்த பாதுகாப்பு உபகரணங்களை அணிய வேண்டும். இரத்தம், தொண்டை சளி மற்றும் சிறுநீர் மாதிரிகள் பரிசோதிக்கப்பட வேண்டும். நோயாளிகளிடமிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் 2 முதல் 8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் சேமிக்கப்பட்டு 48 மணி நேரத்திற்குள் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட வேண்டும். பரிசோதனை முடிவுகளை உடனடியாக சுகாதாரத் துறைக்கு தெரிவிக்க வேண்டும்.
நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழக்க அதிக வாய்ப்பு உள்ளது. தற்போது நிபா வைரஸை தடுக்க தடுப்பூசி இல்லை. மேலும் இதற்கென தனி சிகிச்சை கிடையாது.
Discussion about this post