அமெரிக்காவின் போயிங் விமான நிறுவனம் சீனர்களை விட இந்தியர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை வழங்கியுள்ளது. இதற்கு என்ன காரணம்? இது குறித்த செய்தி தொகுப்பை பாருங்கள்.
அமெரிக்கா, சீனா மற்றும் இங்கிலாந்துக்கு அடுத்தபடியாக உலகின் நான்காவது பெரிய விமானச் சந்தையாக இந்தியா உள்ளது. இந்தியா விரைவில் இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி மூன்றாவது பெரிய விமான பயணிகள் சந்தையாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தெற்காசியாவின் விமானங்களுக்கான தேவை கணிசமாக வளரும் என்று கணிக்கப்பட்டுள்ளது, 2043 க்குள் 2,835 புதிய விமானங்கள் தேவைப்படும், அதில் இந்தியாவின் பங்கு குறிப்பிடத்தக்கதாக இருக்கும்.
வரும் ஆண்டுகளில் விமானப் போக்குவரத்து துறையில் சர்வதேச அளவில் வேகமாக வளரும் சந்தையாக இந்தியா இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, உலகின் முன்னணி விமான தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான போயிங், வரும் ஆண்டுகளில் 31,000க்கும் மேற்பட்ட விமானிகளும், 26,000க்கும் மேற்பட்ட மெக்கானிக்களும் தேவைப்படும் என்று தனது முன்னறிவிப்பை வெளிப்படுத்தியுள்ளது.
இவர்களைத் தவிர, கேபின் பணியாளர்கள், பொறியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், விமான நிலைய ஊழியர்கள், சரக்கு கையாளும் வல்லுநர்கள் மற்றும் பணியாளர்கள், பாதுகாப்பு மற்றும் நிர்வாகப் பணியாளர்கள் என ஏராளமான விமானப் போக்குவரத்து தொடர்பான பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள்.
இந்தியாவின் விமானப் போக்குவரத்துத் துறை தொடர்ந்து வளர்ந்து வரும் நிலையில், இந்த வளர்ச்சிக்கு திறமையான மனித வளமும் தேவைப்படும். திறமையான மனிதவளத்தைப் பயிற்றுவிப்பதற்கு பெரிய உள்கட்டமைப்பு மற்றும் முறையான பயிற்சி நிறுவனங்கள் தேவை.
இந்நிலையில், போயிங் சுகன்யா திட்டத்தை பெங்களூருவில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். வளர்ந்து வரும் விமானப் போக்குவரத்துத் துறையில் இந்தியா முழுவதிலும் இருந்து அதிகமான பெண் குழந்தைகள் நுழைவதை ஆதரிக்கும் வகையில் போயிங் சுகன்யா திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தத் திட்டம் இந்தியா முழுவதும் உள்ள பெண்களுக்கு அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) துறைகளில் முக்கியமான திறன்களைக் கற்றுக்கொள்வதற்கும், விமானத் துறையில் வேலைகளுக்குப் பயிற்சி பெறுவதற்கும் அதிக வாய்ப்புகளை வழங்குகிறது.
அமெரிக்காவிற்கு வெளியே போயிங்கின் மிகப்பெரிய முதலீடான 43 ஏக்கரில் அதிநவீன போயிங் இந்தியா இன்ஜினியரிங் மற்றும் டெக்னாலஜி சென்டர் (BIETC) வளாகத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி, இந்தியாவின் விமானிகளில் 15 சதவீதம் பெண்கள் என்று பெருமையுடன் குறிப்பிட்டார். இது உலக சராசரியை விட மூன்று மடங்கு அதிகம் என்பது ஆச்சரியமான உண்மை.
கடந்த டிசம்பரில் போயிங் நிறுவனம் 6,000க்கும் மேற்பட்ட இந்திய பணியாளர்களை வேலைக்கு அமர்த்தியது. போயிங் நிறுவனம் அதன் விநியோகச் சங்கிலிகளில் 13,000க்கும் மேற்பட்ட இந்தியர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளது.
சீனாவுடனான அமெரிக்க உறவுகளின் சிக்கல்களுக்கு மத்தியில் விமானப் பொறியியல் மற்றும் வடிவமைப்பு மேம்பாட்டிற்காக போயிங் அதிகளவில் இந்தியாவை நோக்கி திரும்பியுள்ளது.
இந்தியாவின் வளர்ந்து வரும் பயணிகள் விமானச் சந்தையை ஒரு முக்கிய வாய்ப்பாக போயிங் பார்க்கிறது.
அதன் ஒரு பகுதியாக கடந்த புதன்கிழமை போயிங் நிறுவனம் வேலைவாய்ப்பு அறிவித்திருந்தது.
இந்தியாவில் 58 பொறியியல் பணியிடங்கள் உட்பட 83 பணியிடங்கள் இந்தியர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால் 5 பதவிகள் மட்டுமே சீனர்களுக்கு ஒதுக்கப்பட்டது.
சீனாவை விட கிட்டத்தட்ட 19 மடங்கு அதிகமான பொறியியல் பணியிடங்கள் இந்தியர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
சீனாவுடனான போயிங்கின் உறவு, 1916 முதல் வலுவாக இருந்தது, 2018 லயன் ஏர் விபத்து மற்றும் 2019 எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விபத்துக்குப் பிறகு கடினமாக இருந்தது.
நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் முரளிதர் மோஹோல், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், 25 போயிங் 737 மேக்ஸ் விமானங்கள், ஸ்பைஸ்ஜெட் 7 விமானங்கள், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஆகாசா ஏர், 24 மேக்ஸ் விமானங்கள் என மொத்தம் 56 போயிங் 737 மேக்ஸ் விமானங்கள் இந்தியாவில் பதிவு செய்து இயக்கப்படுகிறது.
உலகின் முன்னணி விமான நிறுவனமான போயிங் இந்தியாவுக்குத் திரும்புவதால், இந்தியாவின் பயணிகள் விமானப் போக்குவரத்துத் துறை மிகப்பெரிய வளர்ச்சியை அடையும் என்று பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.
Discussion about this post