குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா, சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு நாசாவுடன் இணைந்து இஸ்ரோவின் முதல் கூட்டுப் பணிக்கான ‘முன்னணி விண்வெளி வீரராக’ தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் விண்வெளிக்குச் சென்ற இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை கேப்டன் சுபான்சு சுக்லா பெறுகிறார். அது பற்றிய செய்தி தொகுப்பு.
2024-ம் ஆண்டு அமெரிக்கா சென்றிருந்த பிரதமர் மோடி, அதிபர் ஜோ பிடனை சந்தித்த பிறகு, அமெரிக்காவுடன் இணைந்து சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு இந்திய விண்வெளி வீரர்களை அனுப்பும் திட்டத்தை அறிவித்தார்.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, இந்திய விண்வெளி வீரர் தேர்வு வாரியம் இந்திய விமானப் படையின் (IAF) சோதனை விமானிகளின் குழுவிலிருந்து நான்கு விண்வெளி வீரர்களைத் தேர்ந்தெடுத்தது: குரூப் கேப்டன்கள் பிரசாந்த் பாலகிருஷ்ணன், அஜித் கிருஷ்ணன், அங்கத் பிரதாப் மற்றும் விங் கமாண்டர் சுபான்ஷு சுக்லா.
ஜூலை 27 அன்று, மத்திய அமைச்சர் ஜிதேந்திரா நாடாளுமன்றத்தில், தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய விண்வெளி வீரர்கள் ஏற்கனவே ரஷ்யாவில் அடிப்படை விண்வெளிப் பயிற்சியை முடித்துவிட்டு, பெங்களூருவில் உள்ள இஸ்ரோவின் விண்வெளி வீரர் பயிற்சி மையத்தில் மேம்பட்ட பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர் என்று தெரிவித்தார்.
இந்நிலையில், இஸ்ரோவின் மனித விண்வெளி விமான மையம், குரூப் கேப்டன் சுபான்சு சுக்லா மற்றும் குரூப் கேப்டன் பிரசாந்த் பாலகிருஷ்ணன் ஆகியோரை, அமெரிக்காவைச் சேர்ந்த ஆக்சிம் ஸ்பேஸ் நிறுவனத்துடன் இணைந்து சர்வதேச விண்வெளி நிலையத்திற்கான நான்காவது ஆக்சிம் பயணத்திற்கான பிரைம் மற்றும் பேக்கப் மிஷன் பைலட்களாக ஒப்பந்தம் செய்துள்ளது.
சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் செல்ல பலதரப்பு க்ரூ ஆபரேஷன் பேனல் ஒப்புதல் அளிக்கப்படும் என்றும், பரிந்துரைக்கப்பட்ட ககன்யாத்ரிகள் ஆகஸ்ட் முதல் வாரத்தில் இருந்து பயிற்சியைத் தொடங்குவார்கள் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.
மேலும், இந்த இரு விண்வெளி வீரர்களும் அறிவியல் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப செயல்விளக்க சோதனைகளை மேற்கொள்வதுடன், விண்வெளி பயண நடவடிக்கைகளிலும் பங்கேற்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
1999 ஆம் ஆண்டு கார்கில் போரின் போது, 14 வயதான சுபன்ஷு சுக்லா இந்திய விமானப்படையின் வீரத்தால் ஈர்க்கப்பட்டார். அப்போதுதான் இந்திய ராணுவத்தில் சேர நினைத்தார்.
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் பிறந்த கேப்டன் சுபன்சு சுக்லா தேசிய பாதுகாப்பு அகாடமியில் பட்டம் பெற்றார். ஜூலை 2006 இல் இந்திய விமானப்படையில் போர் விமானியாக நியமிக்கப்பட்ட சுக்லா, ஃபைட்டர் காம்பாட் லீடர் படிப்பை முடித்தார்.
சுகோய், எம்ஐஜி-21, எம்ஐஜி-29, ஜாகுவார், டோம்னியர், பிஏ ஹாக் மற்றும் ஆன்-32 உள்ளிட்ட பல்வேறு போர் விமானங்களை ஓட்டிய அனுபவம் சுக்லாவுக்கு 2,000 மணி நேரத்திற்கும் மேல் உள்ளது.
சமீபத்தில், விங் கமாண்டர் பதவிக்கு உயர்த்தப்பட்ட குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா, இந்தியாவின் முதல் மனிதர்கள் கொண்ட விண்வெளிப் பயணமான ககன்யானுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு இந்திய விமானப்படை அதிகாரிகளில் ஒருவர்.
சுக்லாவுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றொரு விண்வெளி வீரர், குரூப் கேப்டன் பிரசாந்த் பாலகிருஷ்ணன், ஆகஸ்ட் 1976 இல் கேரளாவின் திருவாழியத்தில் பிறந்தார். அவர் தேசிய பாதுகாப்பு அகாடமியில் பட்டம் பெற்றார் மற்றும் விமானப்படை அகாடமியில் இருந்து கௌரவப் பட்டம் பெற்றார்.
3,000 மணி நேரத்திற்கும் மேலான விமான அனுபவத்துடன், அவர் ஒரு பறக்கும் பயிற்றுவிப்பாளர் மற்றும் சோதனை பைலட் ஆவார், அவர் சுகோய்-30 படைக்கு தலைமை தாங்கினார்.
இந்த இரண்டு விண்வெளி வீரர்களும் இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஃபால்கன் 9 ராக்கெட் மூலம் இயக்கப்படும் SpaceX Crew Dragon விண்கலம், புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து அக்டோபரில் புறப்பட உள்ளது.
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு 14 நாள் பயணத்தின் ஒரு பகுதியாக போலந்து, ஹங்கேரி மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த விண்வெளி வீரர்களுடன் சுக்லாவும் வருவார்.
கேப்டன் பிரசாந்த் பாலகிருஷ்ணன், கேப்டன் சுக்லாவின் காப்பு விண்வெளி வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம் ராகேஷ் சர்மாவுக்குப் பிறகு 40 ஆண்டுகளுக்குப் பிறகு விண்வெளிக்குச் செல்லும் இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை கேப்டன் சுக்லா பெற்றார்.
இந்த விண்வெளி பயணத்தின் போது பெற்ற அனுபவங்கள் இந்திய மனித விண்வெளி திட்டத்திற்கு பயனுள்ளதாக இருக்கும் என்றும் இஸ்ரோ மற்றும் நாசா இடையே மனித விண்வெளி விமான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த உதவும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.
Discussion about this post