பங்களாதேஷ் இந்தியாவின் கிழக்கு எல்லையில் அமைந்துள்ளது.
இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தில், சுதந்திரப் போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு வேலை மற்றும் கல்வி நிறுவனங்களில் 30 சதவீத இடஒதுக்கீட்டை மீண்டும் வழங்க உத்தரவிடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த மாதம் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். கலவரமாக வெடித்ததில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பின்னர் உச்சநீதிமன்றம் மாணவர்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் சற்று தணிந்தன. இந்நிலையில், இடஒதுக்கீட்டுக்கு எதிரான போராட்டத்தில் பலர் கொல்லப்பட்டதை கண்டித்தும், கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக் கோரியும், பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகக் கோரியும் நேற்றுமுன்தினம் மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
தலைநகர் டாக்கா உட்பட பல நகரங்களில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் போராட்டங்கள் மற்றும் பேரணிகளில் பங்கேற்றனர். முக்கிய நெடுஞ்சாலைகளில் மறியல் போராட்டமும் நடத்தினர். போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்தது. எதிர்க்கட்சிகள் போராட்டத்தை தூண்டிவிட்டதாக ஆளும் அவாமி லீக் குற்றம் சாட்டியுள்ளது.
போராட்டத்தின் போது மாணவர்களுக்கும் ஆளும்கட்சி ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த கலவரத்தில் ரங்பூரை சேர்ந்த அவாமி லீக் கட்சியின் கவுன்சிலர் ஹரதன்ரன் பரசுராம் சுட்டுக்கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. வங்கதேசத்தில் மீண்டும் ஏற்பட்ட கலவரத்தில் இதுவரை 14 போலீசார் உட்பட 100 பேர் பலியாகியுள்ளனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.
இதற்கிடையில், நிலைமை கை மீறியதால், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு, நாட்டை விட்டு வெளியேறினார். தற்போது இந்தியாவில் தங்கியுள்ள ஷேக் ஹசீனா, இங்கிலாந்தில் புகலிடம் கோரி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. பங்களாதேஷ் இந்தியாவின் கிழக்கு எல்லையில் அமைந்துள்ளது. இந்தியா – வங்கதேச எல்லை 5 மாநிலங்களில் 4 ஆயிரத்து 96 கி.மீ. தூரம் செல்கிறது. எனவே, வங்கதேசத்தில் நிலவும் சூழல் இந்தியாவை பாதிக்காத வகையில் இரு நாட்டு எல்லையில் எல்லைப் பாதுகாப்புப் படை உஷார்படுத்தப்பட்டுள்ளது.
Discussion about this post