வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 405 ஆக உயர்ந்துள்ளது
கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி பகுதிகளில் கடந்த 30ம் தேதி பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த கிராமங்கள் மட்டுமின்றி அருகில் உள்ள அட்டமலை, புஞ்சிரிமட்டம், வெள்ளிரிமலை ஆகிய கிராமங்களும் நிலச்சரிவால் இடிந்து விழுந்தன. நிலச்சரிவின் சக்தியால் வீடுகள், சாலைகள், வாகனங்கள், பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டன. இதனால், காட்டாற்று வெள்ளத்தில் கிராம மக்கள் மண்ணில் புதையுண்டு, அடித்துச் செல்லப்பட்டனர். இன்னும் பலர் காணாமல் போயினர்.
நிலச்சரிவில் இருந்து மீட்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். மண்ணில் புதையுண்டவர்கள் மற்றும் காணாமல் போனவர்களை மீட்புக் குழுவினர் தேடி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று 8வது நாளாக மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. நவீன கருவிகளின் அடிப்படையில் ரேடார் சிக்னல் மூலம் நிலத்தில் புதையுண்டவர்கள் மற்றும் கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை தேடி வருகின்றனர். உடல்கள் கண்டுபிடிக்க வாய்ப்பு அதிகம் உள்ள பகுதிகளில் நவீன கருவிகள் மூலம் தேடுதல் பணிகள் நடந்து வருகின்றன.
நிலச்சரிவில் சிக்கி இதுவரை 405 பேர் உயிரிழந்துள்ளனர். 180 பேர் இன்னும் காணவில்லை. மண்சரிவினால் சூரல்மலை கிராமம் மற்றும் முண்டகை மற்றும் அட்டமலை பகுதிகளைச் சேர்ந்த 4,833 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தவிர அருவி உள்ளிட்ட சுற்றுலா தலங்களை ரசிக்க வந்த சுற்றுலா பயணிகள் விடுதிகளில் தங்கி இருந்தனர். அவர்களுக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை. ஆற்றில் இருந்து உடல்கள் மீட்கப்படுவதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.
இதேவேளை, மண்சரிவில் உயிரிழந்தவர்களின் அடையாளம் தெரியாத மற்றும் உரிமை கோரப்படாத சடலங்களை பொது மயானத்தில் அடக்கம் செய்ய தீர்மானிக்கப்பட்டது. இதன்படி நேற்று ஒரே இடத்தில் சர்வமத பிரார்த்தனையுடன் 39 பேரின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டது.
நிலச்சரிவு காரணமாக வயநாடு மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன.
Discussion about this post