வங்கதேசத்தில் இருந்து தப்பிய ஷேக் ஹசீனா தற்போது இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார்.
வங்கதேசத்தில் ஏற்பட்ட நெருக்கடியை தொடர்ந்து ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்து விட்டு நாட்டை விட்டு வெளியேறினார். ராணுவ ஹெலிகாப்டரில் இந்தியா வந்த ஷேக் ஹசீனா, இங்கிலாந்தில் புகலிடம் கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஷேக் ஹசீனா இங்கிலாந்தில் தஞ்சம் அடையும் வரை இந்தியாவில் இருப்பார் என்று கூறப்படுகிறது. எனவே, ஷேக் ஹசீனா விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து உயர்மட்ட ஆலோசனையில் இந்தியாவும் ஈடுபட்டுள்ளது.
வங்கதேச ராணுவத்துடன் மத்திய அரசு தொடர்பில் இருப்பதாகவும், அங்குள்ள நிலைமையை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அனைத்துக் கட்சி கூட்டத்தில் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு வங்கதேச விவகாரம் தொடர்பான அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார்.
வங்கதேச விவகாரம் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த சந்திப்பில், வங்கதேசத்தின் தற்போதைய சூழ்நிலை மற்றும் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எதிர்க்கட்சிகளுக்கு விளக்கினார். அப்போது, இந்தியர்களை வங்கதேசத்துக்கு அழைத்து வரும் அளவுக்கு அங்கு நிலைமை மோசமாக இல்லை என்றும் ஜெய்சங்கர் வலியுறுத்தினார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ராகுல் காந்தி, டிஆர் பாலு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பங்கேற்றன.
Discussion about this post