வயநாடு பகுதிகளில் இன்று 9வது நாளாக மீட்பு பணி நடைபெற்று வருகிறது.
கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த 30ம் தேதி பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் மலைக்கிராமங்கள் துண்டாடப்பட்டுள்ளன. நிலச்சரிவில் சிக்கி 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் முண்டக்கை, சூரல்மலை, அட்டமலை, புஞ்சிரிமட்டம் ஆகிய பகுதிகள் கண்ணுக்கு தெரியாத அளவுக்கு மூடப்பட்டு மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது.
நிலச்சரிவினால் வெளியேற்றப்பட்டவர்கள் தங்கள் வீடுகளில் எஞ்சியிருக்கும் உடமைகள் மற்றும் ஆவணங்களை சேகரித்து வருகின்றனர். அங்குள்ள வீடுகளில் திருட்டு நடப்பதாக வந்த தகவலையடுத்து போலீசார் ரோந்து பணியை முடுக்கி விட்டுள்ளனர். மீட்பு பணிகளில் ஈடுபடும் தன்னார்வலர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. நிலச்சரிவில் சிக்கி காணாமல் போனவர்களை தேடும் பணி தொடர்ந்து 9வது நாளாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் உள்ள நுகர்வோருக்கு 6 மாதங்களுக்கு மின் கட்டணம் வசூலிக்கப்படாது என கேரள மாநில மின்துறை அமைச்சர் கிருஷ்ணன் குட்டி உத்தரவிட்டுள்ளார். இதனிடையே வயநாட்டில் நிலச்சரிவால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடும் பணி தொடங்கியுள்ளது. இதற்காக 10 குழுக்கள் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர்.
Discussion about this post