வக்ஃப் சட்டம் 1995ஐ மறுபரிசீலனை செய்ய நாடாளுமன்ற கூட்டுக் குழு பரிந்துரை செய்துள்ளதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
வக்ஃப் சொத்துக்களை நிர்வகிக்க 1995 ஆம் ஆண்டு வக்ஃப் வாரிய சட்டத்தில் பல்வேறு திருத்தங்களை மத்திய அரசு முன்மொழிந்துள்ளது. இதன்படி சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ இன்று மக்களவையில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை தாக்கல் செய்தார்.
வக்ப் வாரியங்களின் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மை, வாரியத்தில் முஸ்லிம் பெண்கள் மற்றும் முஸ்லிம் அல்லாதவர்களின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்தல், வாரியத்தின் அதிகாரங்களை ஒழுங்குபடுத்துதல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய மாற்றங்களை இந்த திருத்த மசோதா முன்மொழிகிறது.
ரிஜிஜூவின் கூற்றுப்படி, வக்ஃப் திருத்த மசோதா எந்தவொரு மத அமைப்பின் சுதந்திரத்திலும் தலையிடும் நோக்கம் கொண்டதல்ல. அரசியல் சட்டத்தின் எந்தப் பிரிவும் மீறப்படவில்லை என்றார்.
இந்த மசோதாவை அறிமுகம் செய்யும் போது, பல்வேறு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். வக்ஃப் சட்டம் 1995 அதன் நோக்கங்களை நிறைவேற்றவில்லை என்று ரிஜிஜு பதிலளித்தார். எனவே, திருத்தம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், உங்களால் செய்ய முடியாததை சாதிக்கவே இந்த சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன என்பதை காங்கிரசுக்கு தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
வக்ஃப் சட்டம் 1995-ஐ மறுஆய்வு செய்ய நாடாளுமன்ற கூட்டுக் குழு பரிந்துரைத்துள்ளதால் சீர்திருத்தங்களுக்கு ஆதரவாக அவர் பேசினார். எதிர்க்கட்சிகள் அரசியலுக்காக போராட்டம் நடத்துவதாகவும் அவர் கூறினார்.
ஆனால், இந்த சட்டத் திருத்த மசோதாவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த மசோதா குறித்து மத்திய அரசின் விளக்கத்தையும் ஏற்க மறுத்துவிட்டனர். இந்த சட்டத்திருத்த மசோதா இஸ்லாமியர்களுக்கு எதிரானது என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இதைத் தொடர்ந்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
Discussion about this post