டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது டெல்லி அரசின் மதுபானக் கொள்கையில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, பணமோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் அமலாக்க இயக்குனரகம் வழக்குப் பதிவு செய்துள்ளது.
இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த மார்ச் 21ம் தேதி இரவு அமலாக்கத்துறையினர் கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனிடையே, டெல்லி மதுக் கொள்கையில் ஊழல் நடந்துள்ளதாகக் கூறி கெஜ்ரிவால் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. மேலும், ஊழல் வழக்கில் சிறையில் இருந்த கெஜ்ரிவாலை ஜூன் 26ம் தேதி சிபிஐ கைது செய்தது.
இதையடுத்து, அமலாக்க இயக்குனரகம் தொடர்ந்த வழக்கில் கெஜ்ரிவாலுக்கு நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது. இருப்பினும், சிபிஐ வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் நீதிமன்ற காவலில் உள்ளார். இந்நிலையில், சிபிஐ வழக்கில் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில், இன்று அவர் காணொலி காட்சி மூலம் டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த சிறப்பு நீதிபதி காவேரி பவேஜா, வரும் 20ம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து உத்தரவிட்டார்.
மதுக்கொள்கை வழக்கில் கெஜ்ரிவாலுக்கு எதிராக சிபிஐ தாக்கல் செய்த கூடுதல் குற்றப்பத்திரிகையை வரும் 12ம் தேதி நீதிமன்றம் பரிசீலிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post