அதிக மகசூல் தரும் 109 பயிர் விதைகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று வெளியிட்டார்.
டெல்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், அதிக மகசூல் தரக்கூடிய, காலநிலையை தாங்கும் உயிர் வளம் கொண்ட 109 பயிர் விதைகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று வெளியிட்டார். 34 வயல் பயிர்கள் மற்றும் 27 தோட்ட பயிர்கள் உட்பட 109 ரகங்களை பிரதமர் மோடி அறிமுகப்படுத்தினார். விவசாயிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். விவசாய நிலங்களையும் பார்வையிட்டார்.
இன்று அறிமுகப்படுத்தப்பட்ட 109 வகைகளில் சிறுதானியங்கள், தீவனப் பயிர்கள், எண்ணெய் வித்துக்கள், பருப்பு வகைகள், கரும்பு, பருத்தி போன்ற புதிய ரகங்களும், தோட்டக்கலைப் பயிர்களில் பழங்கள், காய்கறிகள், சணல் மற்றும் மூலிகைப் பயிர்களும் அடங்கும்.
இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நிலையான விவசாயம் மற்றும் பருவநிலை மாற்றத்தை எதிர்க்கும் முறைகளை பின்பற்றுவதை பிரதமர் மோடி எப்போதும் ஊக்குவித்து வருகிறார். ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத இந்தியாவை உருவாக்க மதிய உணவு, அங்கன்வாடி போன்ற பல்வேறு அரசு திட்டங்களுடன் உயிரி வளப்படுத்தப்பட்ட பயிர்களை ஊக்குவிப்பதை அவர் வலியுறுத்தினார்.
இந்த நடவடிக்கைகள் விவசாயிகளுக்கு நல்ல வருவாயை உறுதி செய்வதோடு அவர்களுக்கு தொழில் முனைவோர்க்கான புதிய வழிகளைத் திறக்கும் என்று பிரதமர் கூறுகிறார். அதிக மகசூல் தரும் 109 ரகங்களை வெளியிடுவதற்கான இந்த நடவடிக்கை இந்த திசையில் மற்றொரு படியாகும்.
Discussion about this post