ஹிண்டன்பர்க் அறிக்கை மூலம் நாட்டில் பொருளாதாரச் சீரழிவை ஏற்படுத்த காங்கிரஸ் முயற்சிப்பதாக பாஜக எம்பியும், கட்சியின் மூத்த தலைவருமான ரவிசங்கர் பிரசாத் குற்றம்சாட்டியுள்ளார்.
டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்களால் நிராகரிக்கப்பட்ட பின்னர் நாட்டில் பொருளாதார சீரழிவு மற்றும் உறுதியற்ற தன்மையை உருவாக்க காங்கிரஸ் கட்சி தனது அமைப்புகளுடன் இணைந்து முயற்சிப்பதாக விமர்சித்தார்.
சனிக்கிழமையன்று ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியிடப்பட்டதை சுட்டிக்காட்டிய ரவிசங்கர் பிரசாத், ஞாயிற்றுக்கிழமை பீதியையும், அடுத்த திங்கட்கிழமை மூலதனச் சந்தையில் குழப்பத்தையும் ஏற்படுத்தியதாகக் குறிப்பிட்டார்.
மூலதனச் சந்தை மற்றும் பங்குச் சந்தைக்கு இந்தியா பாதுகாப்பான நாடு என்றும், சந்தை நிலவரம் சீராகத் தொடர்வதை உறுதி செய்வது செபியின் கடமை என்றும் அவர் கூறினார்.
ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் இருந்த ஹிண்டன்பர்க், செபியின் நோட்டீசுக்கு பதிலளிக்கவில்லை என்றும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை மீண்டும் கூறியதாகவும் ரவிசங்கர் பிரசாத் பதிலடி கொடுத்தார்.
Discussion about this post