அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு.
டெல்லி அரசின் மதுபானக் கொள்கையில் முறைகேடு நடந்ததாகக் கூறி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது பணமோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் அமலாக்க இயக்குனரகம் வழக்குப் பதிவு செய்துள்ளது.
இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த மார்ச் 21ம் தேதி இரவு அமலாக்கத்துறையினர் கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனிடையே, டெல்லி மதுக் கொள்ளையில் ஊழல் செய்ததாக கெஜ்ரிவால் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. மேலும், ஊழல் வழக்கில் சிறையில் இருந்த கெஜ்ரிவாலை ஜூன் 26ம் தேதி சிபிஐ கைது செய்தது.
திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் கோரி டெல்லி கீழ் நீதிமன்றம், டெல்லி உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அமலாக்க இயக்குனரகம் பதிவு செய்த வழக்கில் கெஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் 12ம் தேதி ஜாமீன் வழங்கியது. இருப்பினும், சிபிஐ பதிவு செய்த வழக்கில் அவர் தொடர்ந்து சிறையில் உள்ளார்.
இதனிடையே, சிபிஐ பதிவு செய்த வழக்கில் இடைக்கால ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க மறுத்தது. இதையடுத்து, சிபிஐ வழக்கில் இடைக்கால ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மேல்முறையீடு செய்தார். மருத்துவ காரணங்களுக்காக இடைக்கால ஜாமீன் கோரி கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்தார்.
இந்நிலையில், இடைக்கால ஜாமீன் கோரி கெஜ்ரிவால் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதனிடையே, கெஜ்ரிவாலின் இடைக்கால ஜாமீன் மனுவுக்கு பதிலளிக்க சிபிஐக்கு நோட்டீஸ் அனுப்பிய உச்ச நீதிமன்றம், வழக்கை வரும் 23ம் தேதிக்கு ஒத்திவைத்தது.