டெல்லியில் 3,500 போக்குவரத்து காவலர்களும், 10,000 போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்தியாவின் 78வது சுதந்திர தினம் நாளை நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. டெல்லி செங்கோட்டையில் நாளை காலை 7.30 மணிக்கு நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்து சுதந்திர தின உரை ஆற்றுகிறார். இது அவரது 11வது சுதந்திர தின உரை.
இந்த ஆண்டு சுதந்திர தின விழா ‘வளர்ந்த பாரதம்’ என்ற கருப்பொருளில் நடைபெறவுள்ளது. இந்த விழாவுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது.
இந்நிலையில், சுதந்திர தின விழாவின் முழு ஒத்திகை நிகழ்ச்சி டெல்லி செங்கோட்டையில் நேற்று நடைபெற்றது. இதில் பாதுகாப்பு படை வீரர்களும் கலந்து கொண்டனர். மேலும் துணை ராணுவப் படைகள் மற்றும் என்.சி.சி. மாணவர் அமைப்பினரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, பாதுகாப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகள் குறித்த பயிற்சியும் நடத்தப்பட்டது. ஒத்திகை காரணமாக செங்கோட்டையைச் சுற்றியுள்ள போக்குவரத்து மாற்றப்பட்டது.
சுதந்திர தின விழாவை முன்னிட்டு டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளதால் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பில் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளனர். உளவுத்துறை போலீசாரும் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். செங்கோட்டையின் வெளிப்புற பகுதிகளில் 3,500 போக்குவரத்து போலீசாரும், 10,000 டெல்லி போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
செங்கோட்டையைச் சுற்றிலும் உள்பகுதியிலும் துணை ராணுவப் படைகள் அடுக்கடுக்காக நிறுத்தப்படும். செங்கோட்டையைச் சுற்றியுள்ள சாலைகள் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. கண்காணிப்பு கேமராக்கள் அதிகளவில் பொருத்தப்பட்டு வருகின்றன. 700 இடங்களில் செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
டெல்லி செங்கோட்டை பகுதியில் மட்டுமின்றி, மக்கள் அதிகம் கூடும் விமான நிலையம், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள் மற்றும் சந்தைகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
Discussion about this post