பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கை தீவிரமாக எடுத்துக்கொண்ட இந்திய மருத்துவ சங்கம் இன்று (சனிக்கிழமை) நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் பெண் மருத்துவர் கொடூரமாக தாக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பயிற்சி மருத்துவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த பாலியல் கொலை தொடர்பாக சஞ்சய் ராயை போலீசார் கைது செய்தனர். இதனிடையே, இந்த வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி சிபிஐ சிறப்பு புலனாய்வுக் குழு கொல்கத்தாவில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகிறது. இதனிடையே, இரண்டு நாட்களுக்கு முன், ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது. மருத்துவமனை முன்பு ஆயிரக்கணக்கானோர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திடீரென போராட்டம் வன்முறையாக மாறியது. போராட்டக்காரர்கள் மருத்துவமனைக்குள் நுழைந்து மருத்துவமனையை முற்றிலுமாக சூறையாடினர். மருத்துவர்களின் நாற்காலிகள், கருவிகள், கண்ணாடி ஜன்னல்கள், படுக்கைகள் அனைத்தும் அடித்து நொறுக்கப்பட்டன.
இதனால், போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி போராட்டக்காரர்களை கலைக்க நேரிட்டது. மருத்துவமனையை சூறையாடியதாக இதுவரை 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உண்மையான குற்றவாளிகளை திரிணாமுல் காங்கிரஸ் மறைத்துவிட்டதாக பாஜக குற்றம்சாட்டி போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளது. மருத்துவ மாணவியின் மரணத்திற்கு நீதி கோரி மம்தா பானர்ஜியும் போராட்டத்தில் கலந்து கொண்டார்.
மருத்துவ மாணவி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கை தீவிரமாக எடுத்துக்கொண்டு, இந்திய மருத்துவ சங்கம் இன்று (சனிக்கிழமை) நாடு தழுவிய வேலை நிறுத்தம் அறிவித்துள்ளது. இன்று (சனிக்கிழமை) காலை 6 மணி முதல் 24 மணி நேரம் வரை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். இதன் காரணமாக வழக்கமான வெளிநோயாளர் பிரிவு மூடப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட அறுவை சிகிச்சை எதுவும் செய்யப்படாது. இதேவேளை, அவசர சிகிச்சைப் பிரிவு மற்றும் அத்தியாவசிய சேவைகள் வழமை போன்று இயங்கும். இவ்வாறு இந்திய மருத்துவ சங்கம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
Discussion about this post