பாதுகாப்பு துறை உள்ளிட்ட முக்கிய துறைகளில் செயலாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.
மத்திய அரசின் முக்கிய துறைகளின் செயலாளர்களை மாற்றி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய பணியாளர் அமைச்சகம் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-
பிரதமர் அலுவலகத்தில் சிறப்பு செயலாளராக பணியாற்றி வரும் புண்யா சலிலா ஸ்ரீவஸ்தவா, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய சுகாதாரத்துறை செயலாளராக இருக்கும் அபூர்வ சந்திராவின் பதவிக்காலம் அடுத்த மாதம் 30ஆம் தேதியுடன் முடிவடைகிறது, அதன் பிறகு புண்ய சலிலா ஸ்ரீவஸ்தவா பொறுப்பேற்கிறார். தொழில்துறை மற்றும் உள்நாட்டு முதலீட்டு ஊக்குவிப்பு செயலாளர் ராஜேஷ் குமார் சிங் புதிய பாதுகாப்பு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது பாதுகாப்பு செயலாளராக இருக்கும் அரமனே கிரிதாரின் பதவிக்காலம் வரும் அக்டோபர் 31ம் தேதியுடன் முடிவடைகிறது.அதுவரை ராணுவ அமைச்சகத்தின் சிறப்பு செயல் அதிகாரியாக ராஜேஷ் குமார் சிங் செயல்படுவார். இது தவிர சிறுபான்மையினர் நலத்துறை செயலாளர் கதிகிதலா ஸ்ரீனிவாஸ், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
குடியரசுத் தலைவரின் புதிய செயலாளராக தீப்தி உமாசங்கரும், நிதிச் சேவைத் துறையின் செயலாளராக விவேக் ஜோஷியும், நிதிச் சேவைத் துறையின் புதிய செயலாளராக நிலக்கரி அமைச்சகத்தின் கூடுதல் செயலாளராக நாகராஜு மத்திராலாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Discussion about this post