உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியை பிரதமர் மோடி சந்தித்தார்.
பிரதமர் மோடி 2 நாள் அதிகாரப்பூர்வ பயணமாக நேற்று போலந்து சென்றார். 45 ஆண்டுகளில் முதல் முறையாக போலந்து செல்லும் முதல் இந்தியப் பிரதமர் மோடி. தலைநகர் வார்சா சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பின், போலந்து நாட்டில் இந்திய வம்சாவளி மற்றும் தொழிலதிபர்களை பிரதமர் மோடி நேற்று முன்தினம் சந்தித்து பேசினார். இதையடுத்து போலந்து அதிபர் ஆண்ட்ரேஜ் துடாவையும் பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார்.
இதனிடையே போலந்து பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி உக்ரைன் சென்றார். போலந்தில் இருந்து ரயில் மூலம் பிரதமர் மோடி இன்று உக்ரைன் சென்றடைந்தார். சுதந்திரத்திற்கு பிறகு உக்ரைன் செல்லும் முதல் இந்திய பிரதமர் மோடி ஆவார்.
தலைநகர் கீவ் நகரில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. உக்ரைனில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் பிரதமர் மோடியை வரவேற்றனர்.
இந்நிலையில் உக்ரைன் சென்ற பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் ஜெலென்ஸ்கியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, ரஷ்யாவுடனான போரால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த காணொளி காட்சிகளை அதிபர் ஜெலென்ஸ்கி, பிரதமர் மோடியிடம் திரையிட்டார். போரின் விளைவுகள் குறித்தும் பிரதமர் மோடியிடம் அதிபர் ஜெலென்ஸ்கி விளக்கினார்.
முன்னதாக, பிரதமர் மோடி கடந்த ஜூலை மாதம் ரஷ்யா சென்றிருந்தார். அப்போது ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் அதிபர் புதினை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பை உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி விமர்சித்தார்.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் தலைவர் உலகின் மிகப்பெரிய குற்றவாளியை கட்டிப்பிடிப்பது ஏமாற்றம் அளிப்பதாக பிரதமர் மோடியை ஜெலென்ஸ்கி விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது இந்திய பிரதமர் மோடி உக்ரைன் சென்றுள்ளதால் ரஷ்யா – உக்ரைன் போர் முடிவுக்கு வருமா? என்ற விவாதம் எழுந்துள்ளது.