பிரதமர் மோடி மராட்டியத்தில் பேசுகையில், பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்திற்கு செல்ல விரும்பவில்லை என்றால், வீட்டில் இருந்தபடியே இ-எப்ஐஆர் பதிவு செய்யலாம் என்றார்.
மகாராஷ்டிர மாநிலம் ஜல்கானில் லக்பதி திதி சம்மேளன் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பிரதமர் மோடி இன்று பொதுமக்களிடம் உரையாற்றினார்.
அவர் பேசுகையில், நாட்டில் உள்ள ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும், மாநில அரசுக்கும் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மன்னிக்க முடியாத பாவம்.
குற்றவாளிகள் தப்பக்கூடாது. அவர்களுக்கு எந்த வகையிலும் உதவுபவர்களும் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும், என்றார். பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் அலட்சியம் காட்டினால் அதற்கு மக்கள் பொறுப்பேற்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மருத்துவமனை, பள்ளி, அலுவலகம் அல்லது போலீஸ் நடைமுறை என எதுவாக இருந்தாலும், அலட்சியம் எங்கு நடந்தாலும், அனைவரும் பொறுப்பேற்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, குற்றவாளிகளை அரசு கடுமையாக தண்டிக்கும் என பெண்களிடம் உறுதியளித்தார்.
பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கும் வகையில் நமது அரசு தொடர்ந்து கடுமையான சட்டங்களை இயற்றி வருகிறது. எண்ணற்ற சகோதரிகள் மற்றும் மகள்கள் இன்று கூடியிருக்கிறார்கள்.
முன்னதாக, எஃப்.ஐ.ஆர்., சரியான நேரத்தில் பதிவு செய்யப்படுவதில்லை என புகார் எழுந்தது. வழக்குகள் விசாரிக்கப்படுவதில்லை. நீதி வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாகவும் புகார் எழுந்தது. பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் மூலம் இதுபோன்ற பல தடைகளை நீக்கியுள்ளோம் என்றார்.
அதேபோல், பாதிக்கப்பட்டவர் காவல் நிலையத்திற்கு செல்ல விரும்பவில்லை என்றால், இ-எஃப்ஐஆர் பதிவு செய்யலாம். வீட்டிலிருந்தே பதிவு செய்யலாம். அந்த இ-எஃப்ஐஆர் பதிவை யாராலும் சேதப்படுத்தவோ மாற்றவோ முடியாது என்றும் அவர் கூறினார்.
சமீபத்தில், மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா நகரில், ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரிந்த 31 வயது பயிற்சி மருத்துவர், கடந்த 9ஆம் தேதி அதிகாலை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி, நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக தீவிர போராட்டங்கள் நடந்து வருகின்றன.
Discussion about this post