தமிழகத்தில் ஓசூரில் இருந்து அத்திப்பள்ளி வழியாக கர்நாடக மாநிலம் பொம்மசந்திரா வரை மெட்ரோ ரேபிட் டிரான்சிட் (எம்ஆர்டிஎஸ்) அமைப்பதற்கான விரிவான ஆய்வு அறிக்கை தயாரிக்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக மெட்ரோ ஆணையம் அறிவித்துள்ளது. அதே சமயம் மெட்ரோ திட்டத்துக்கு கர்நாடகா எதிர்ப்பு தெரிவிக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்த செய்தி தொகுப்பை பாருங்கள்.
6,900 கோடி செலவில் தமிழகத்தின் ஓசூர் மற்றும் பெங்களூரு பொம்மசந்திரா இடையே மெட்ரோ ரயில் திட்டத்தை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் முன்மொழிந்துள்ளது.
மத்திய நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வீட்டுவசதி அமைச்சகத்தின் ஒப்புதலுடன் தமிழ்நாடு அரசின் (GoTN) உத்தரவுக்கு இணங்க இந்த திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக, ஓசூர் பகுதிகளில் மெட்ரோ ரயில் கழக அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
விரிவான சாத்தியக்கூறு அறிக்கையை இறுதி செய்ய, சென்னை மெட்ரோவின் நிர்வாக இயக்குனர் பெங்களூரு மெட்ரோவின் நிர்வாக இயக்குனரை பெங்களூரில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்தார்.
ஓசூரில் இருந்து பொம்மசந்திரா வரையிலான மெட்ரோ திட்டத்தின் முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இருந்து அத்திப்பள்ளி வழியாக பொம்மசந்திரா வரை சுமார் 23 கிலோமீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட்டு வருகிறது.
இதில், 11 கி.மீ., தமிழகத்திலும், மீதமுள்ள, 12 கி.மீ.,, கர்நாடகாவிலும் உள்ளது. இந்த மெட்ரோ ரயில் பாதையில் மொத்தம் 12 மெட்ரோ ரயில் நிலையங்களும், ஒரு பணிமனையும் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மெட்ரோ பாதை பெங்களூரு புறநகர் ரயில் மற்றும் பேருந்து நிலையங்களை இணைக்கும் என்றும் பெங்களூரு விமான நிலைய பாதையுடன் இணைக்கப்படும் என்றும் தெரிகிறது.
ஓசூர்-பெங்களூரு இடையே இந்த மெட்ரோ சேவையானது போக்குவரத்து இணைப்பை மேம்படுத்துவதோடு, இரு மாநில மாணவர்கள், தொழிலாளர்கள் உட்பட பல்வேறு மக்களின் பயணத்தை எளிதாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெங்களூரில் இருந்து ஓசூர் 39 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. பெங்களூரை விட ஓசூரில் சிறந்த சாலைகள் மற்றும் போக்குவரத்து குறைவாக உள்ளது.
எனவே இந்த ஓசூர்-பொம்மச்சந்திரா மெட்ரோ இணைப்பு ஓசூரின் பொருளாதார வாய்ப்புகளை மேலும் மேம்படுத்தும் என்று நம்பப்படுகிறது.
இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வரும்போது பெங்களூரை விட ஓசூர் பொருளாதாரத்தில் வளர்ச்சி அடையும் என்பதால் கர்நாடகா இந்த திட்டத்திற்கு சரியான ஒத்துழைப்பை அளிக்காமல் போகலாம் என்றும் கூறப்படுகிறது. சில கன்னட அமைப்புகள் மற்றும் நகர்ப்புற வளர்ச்சி நிபுணர்கள் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த மெட்ரோ திட்டம் செயல்படுத்தப்பட்டால் பெங்களூருவின் பொருளாதார நலன் பாதிக்கப்படும் என்று கூறியுள்ளனர்.
நாட்டின் அனைத்து மெட்ரோ ரயில் நெட்வொர்க்குகளின் தாய் அமைப்பான MoHUA, எதிர்ப்பின் பட்சத்தில் ஓசூர்-பொம்மச்சந்திரா மெட்ரோ இணைப்பு திட்டத்தை செயல்படுத்தும் என்று சென்னை மெட்ரோ வட்டாரங்கள் தெரிவித்தன.
Discussion about this post