இந்தியர்களுக்கு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் குறைபாடு: ஆய்வில் தெரிய வந்துள்ளது
தி லான்செட் குளோபல் ஹெல்த் என்ற மருத்துவ இதழில் சமீபத்தில் வெளியான ஆய்வில், இந்தியர்கள் இரும்பு, கால்சியம், ஃபோலேட் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை போதுமான அளவு எடுத்துக் கொள்வதில்லை என்று தெரியவந்துள்ளது. இந்த ஆய்வில், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் அடங்கிய குழு, 185 நாடுகளில் ஆய்வு செய்துள்ளனர்.
உலக மக்கள் தொகையில் 99.3 சதவீதம் பேர், போதுமான ஊட்டச்சத்துக்களை உட்கொள்வதைக் கணக்கிட, சர்வதேச உணவுமுறை தரவுத்தளத்தின் பொது தரவுகளைப் பயன்படுத்தி இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. செறிவூட்டப்பட்ட உணவுகள் மற்றும் சப்ளிமெண்ட்ஸ்களை பயன்படுத்தாத மக்களை மையமாகக் கொண்டே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த ஆய்வின் முக்கிய கண்டுபிடிப்புகளின் படி, உலக மக்கள் தொகையில் சுமார் 70 சதவீதம், அதாவது ஐந்து பில்லியனுக்கும் அதிகமான மக்கள், போதுமான அளவு அயோடின், வைட்டமின் E மற்றும் கால்சியம் சத்து இல்லாமல் இருக்கிறார்கள். ஆண்களை விட பெண்களே அதிக அளவில் அயோடின், வைட்டமின் பி12 மற்றும் இரும்பு சத்துக்கள் குறைவாக உள்ளனர்; அதே நேரத்தில், ஆண்களுக்கு மெக்னீசியம், வைட்டமின் பி6, துத்தநாகம் மற்றும் வைட்டமின் சி குறைபாடு அதிகமாக உள்ளது.
இந்தியாவில், பெண்களுக்கு அயோடின் குறைபாடு அதிகமாகவும், ஆண்களுக்கு துத்தநாகம் மற்றும் மெக்னீசியம் குறைபாடுகள் அதிகமாகவும் உள்ளன. குறிப்பாக 10 முதல் 30 வயது வரையிலானவர்கள் கால்சியம் குறைபாட்டால் பாதிக்கப்படுகிறார்கள். இந்த குறைபாடுகள் தெற்காசியா, தென்கிழக்கு ஆசியா மற்றும் துணை-சஹாரா ஆப்பிரிக்கா போன்ற பகுதிகளில் அதிகமாக உள்ளன.
செறிவூட்டப்பட்ட உணவுகள் அல்லது சப்ளிமெண்ட்ஸ் பயன்படுத்தப்படாத பகுதிகளில் மட்டுமே இந்த ஆய்வு முடிவுகள் பொருந்தும் என்றும், இதனால் எங்கே அந்த உணவுகள் உபயோகப்படுத்தப்படுகிறதோ அங்கே இதுபோன்ற முடிவுகள் உட்படாது என்றும் ஆய்வு விளக்குகிறது.
மொத்தத்தில், தி லான்செட் குளோபல் ஹெல்த் ஆய்வு, அத்தியாவசிய நுண்ணூட்டச்சத்துக்களும் சமச்சீர் உணவும் கொண்ட உணவுகளின் அவசியத்தை வலியுறுத்துகிறது. உலகளாவிய ஊட்டச்சத்து சவால்களை புரிந்து கொள்ளவும், சரியான நிவர்த்தி காணவும், தொடர்ந்து ஆராய்ச்சியும் தரவுசேகரிப்பும் அவசியம் என்று சுகாதார நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
Discussion about this post