2 நாள் பயணமாக புருனேயின் தலைநகர் பந்தர் செரி பெகவான் சென்ற பிரதமர் மோடிக்கு அந்நாட்டு அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்தியா மற்றும் புருனே இடையே தூதரக உறவில் 40 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, புருனே மன்னர் சுல்தான் ஹாஜி ஹசனல் போல்கியா, பிரதமர் மோடியை அந்நாட்டுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.
இதையடுத்து புருனேயின் தலைநகர் பந்தர் செரி பெகவான் சென்றடைந்த பிரதமர் மோடியை அந்நாட்டின் பட்டத்து இளவரசர் ஹாஜி அல்-முஹ்தாதி பில்லா உற்சாகமாக வரவேற்றார். பின்னர் புருனேயில் நடந்த ராணுவ அணிவகுப்பை பிரதமர் மோடி பார்வையிட்டார்.
பின்னர், ஹோட்டலுக்கு வந்த பிரதமர் மோடியை இந்திய வம்சாவளியினர் ஆரவாரம் செய்தும், பதாகைகள் ஏந்தியவாறும் வரவேற்றனர். சிறுமி வரைந்த இந்திய தேசியக் கொடியில் பிரதமர் மோடி கையெழுத்திட்டு பாராட்டினார். அப்போது, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த குழந்தைகளை பிரதமர் மோடி கைகளில் பிடித்தார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் அவருடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.
பின்னர் புருனேயின் தலைநகர் பந்தர் செரி பெகவானில் உள்ள இந்திய தூதரகத்திற்கான புதிய கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் தூதரக அதிகாரிகள் மற்றும் இந்திய வம்சாவளியினர் கலந்து கொண்டனர்.
Discussion about this post